அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும்... தமிழகத்தில் மீண்டும் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
சென்னை: அதிகாலையில் பனிமூட்டம் அதிகரிக்கும் என்றும், தமிழகத்தில் இன்று முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, தெற்கு கேரளா கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக, பிப்ரவரி 2ஆம் தேதியான இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக் கூடும். இதர தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக் கூடும். மேலும், கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 3ஆம்தேதி தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்.
ஜனவரி 4ஆம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
பிப்ரவரி 5ஆம் தேதி தென் தமிழகம், வடதமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, நீலகிரி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
பிப்ரவரி 6ஆம் தேதி முதல் பிப்ரவரி 8ஆம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்ச வெப்பநிலை 30 முதல் 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 முதல் 24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.