தானம் வீட்டிலிருந்து துவங்குகிறது!

admin
Nov 20, 2025,01:20 PM IST

- சுப்புலட்சுமி பிரமநாயகம்


தானம் வீட்டிலிருந்து துவங்குகிறது ( Charity begins at home).

குப்பை — நம் மனிதத்தன்மையின் 

கண்ணாடி...

நம்மில் சிலர் தெருவில் குப்பைகளை அப்படியே எறிகிறோம்… 

சிலர் நெகிழிப் பைகளில் சுற்றி குப்பைத் தொட்டிகளில் போடுகிறோம். 

அதை சுத்தப்படுத்த வருபவர்கள் யார் ?

"நம்மைவிட குறைவாக படித்த

மனிதநேயத்தால் நிறைந்த மனித தெய்வங்கள்".




நாம் ஒரு சமூகமாக முன்னேறிக் கொண்டிருந்தாலும், அடிப்படையான பொறுப்புகள்  கூட நம்மால் நிறைவேற்றப்படாத தருணங்கள் பல இருக்கத்தான் செய்கின்றன. வீட்டில் பயன்படுத்திய சானிடரி நாப்கின்கள், டயப்பர்கள், மருத்துவக் குப்பைகள் கூட திறந்த தெருவில், குப்பைத்தொட்டி இல்லாத இடங்களில் கொடூரமாக தூக்கி எறியப்படுகின்றன.


கடைகளில் ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு மிச்சமான உணவுடன் கூடிய டப்பாக்களும், கவர்களும் அப்படியே சுருட்டி வீசப்படுகின்றன. டப்பாக்களை சுத்தம் செய்து விட்டு போடுவதில்  தான் என்ன குறைந்து விடும்?  மக்கும் குப்பை, மக்காத குப்பை பிரித்துப் போட்டுவிட்டால் நாம் சமூக விழிப்புணர்வு உடையவர்களா?


தெருவை சுத்தம் செய்யும் பணியாளர் அதை கைகளால் எடுக்க வேண்டியிருக்கிறது. அதன் மூலம் தொற்றுக்களும், தோல் நோய்களும் அவர்களைத் தாக்காதா? சமூக பொறுப்புகள் அந்த மனிதர்களின் கைகளில் இல்லாமல், நம்மிடமிருந்து அல்லவா தொடங்க வேண்டும். குப்பைகளை எறிவது ஒரு சின்ன செயல் போலத் தோன்றலாம். ஆனால் அதைப் பார்த்தாலே ஒரு சமுதாயத்தின் ஒழுக்கம், பொறுப்பு, கல்வி, நேசம் எல்லாம் தெரியும். குப்பைகளை எறிவதில் எண்ணங்கள் பிரதிபலிக்கப்படுகின்றன.


சானிடரி நாப்கின்களும்,  டயப்பர்களும்– சாதாரண குப்பைகளல்ல. உயிருக்கு ஆபத்தான பாக்டீரியாக்களை கொண்டு திறந்து கிடக்கும்போது அலைந்து திரியும் விலங்குகள் கிழித்து பரப்புகின்றன. காகங்களும், புறாக்களும் கழிவென்று அறியாமல் கடித்துக் கொறிக்கின்றன. 


நாம் நம் குழந்தைகளுக்கு நல்ல பள்ளி, நல்ல கல்வி, நல்ல வாழ்க்கை கொடுக்க விரும்புகிறோம்… தெருவில் குப்பைகளை நாம் கண்டபடி எறிந்தால், அவர்கள் என்ன கற்றுக்கொள்வார்கள்?  என்பதை மறந்து போகிறோம்.


சுற்றுச்சூழலுக்கு மரியாதை, பிறர் உழைப்புக்கு மதிப்பு, சமுதாயத்துக்கான பொறுப்பு என்பதே உண்மையான கல்வி.

சமூகம் மாற வேண்டுமென்றால் முதலில் நாம் மாற வேண்டும்.


குறைந்த விலையில் வலைதளங்களில் கிடைக்கும் நாப்கின் இன்சினரேட்டர்கள் பெண்குழந்தைகளுக்கு வாங்கப்படல் வேண்டும்.

டயப்பர்கள் கழிவறைகளில்  சுத்தம் செய்து போடப்படல் வேண்டும். 


இந்த புண்ணிய காரியங்களை எல்லாம் புறந்தள்ளி போட்டுவிட்டு  தாய், தந்தையர் , சகோதர, சகோதரிகளை ஒத்திருக்கும் குப்பை எடுக்கும் உறவுகளை  மறைமுகமாக துன்புறுத்தி பாவங்களை செய்து விட்டு புண்ணியம் சேர்க்க, அர்ச்சனைகளும், ஹோமங்களும்ம், பிதுர் காரியங்களும், பரிகார பூஜைகளும், தான தர்மங்களும் செய்வது எந்த விதத்தில் துணை நிற்கும்?


இன்று போடுமிடத்தில் இருக்கும் நாம் பொறுக்கும் இடத்திற்கும்  போகலாம். எதுவும் நிரந்தரமல்ல! கொரோனா எச்சரித்துத் தானே சென்றுள்ளது?


குப்பைகளை சரியாக பராமரிப்பது ஒரு மனிதனின் நாகரிகம், ஒரு சமூகத்தின் உயர்வு, ஒரு தலைமுறையின் மரியாதை.


(சுப்புலட்சுமி பிரமநாயகம் எம்ஏ, எம்சிஏ, பிஎட் படித்தவர். சென்னையைச் சேர்ந்தவர் ஆசிரியை மற்றும் தமிழ் எழுத்தாளர்)