முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு: ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு!

Su.tha Arivalagan
Jun 15, 2026,11:18 AM IST

செங்கல்பட்டு: தமிழக முதலமைச்சர் மற்றும் தவெக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு மாவட்ட குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அடுத்தகட்ட விசாரணை ஆகஸ்ட் 7-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.


கடந்த 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சங்கீதா, செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். இந்த மனுவில் பல்வேறு தனிப்பட்ட காரணங்களையும், ஜீவனாம்சம் கோரியும் அவர் குறிப்பிட்டிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடக்கத்தில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த விவகாரம், பிப்ரவரி மாத இறுதியில் செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட போது பொதுவெளியில் தெரிய வந்தது.


விஜய் தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள நிலையில், இந்த வழக்கு தமிழக அரசியல் மற்றும் பொதுமக்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருவருமே பொதுவாழ்க்கையில் மிக முக்கியமான நபர்கள் என்பதால், பாதுகாப்புக் காரணங்களைக் கருத்தில் கொண்டு, அவர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதற்குப் பதிலாக, காணொலி வாயிலாக விசாரணையில் பங்கேற்க அனுமதி கோரப்பட்டதாகத் தெரிகிறது.  ஆனால் அந்தக் கோரிக்கையை நீதிமன்றம் ஏற்கவில்லை. தொடர்ந்து ஆகஸ்ட் 7ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.


முன்னதாக, ஜூன் 15-ஆம் தேதி விசாரணைக்கு வந்த போது, இருதரப்பு வழக்கறிஞர்களும் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர் என்பது நினைவிருக்கலாம்.


சமரசத்திற்கு முயற்சி நடக்கிறதா?




நீதிமன்ற விசாரணைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தாலும், திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் தம்பதியினர் மீண்டும் இணைவது குறித்த பல்வேறு யூகங்கள் பரவி வருகின்றன. ஒருவேளை நீதிமன்றத்திற்கு வெளியே சுமூகமான தீர்வு அல்லது சமரசப் பேச்சுவார்த்தைகள் நடைபெற வாய்ப்புள்ளதா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் ஏதும் இல்லை. எனினும், இருதரப்பிலும் வழக்கறிஞர்கள் மூலம் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


விஜய் - சங்கீதா தம்பதியினருக்கு சஞ்சய், திவ்யா சாஷா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப்போகிறார்கள் என்பது குறித்த ஆவல் மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி நடைபெறவுள்ள அடுத்தகட்ட விசாரணை, இந்த வழக்கின் முக்கியத் திருப்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதற்கிடையில் முதல்வர் விஜய்யும், அவரது மனைவி சங்கீதாவும் மீண்டும் நீலாங்கரையில் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ ஆரம்பித்து விட்டதாகவும், விஜய்யின் தாயார் ஷோபா இருவருக்கும் இடையே சமரசம் பேசி இருவரையும் சேர்த்து வைத்துள்ளதாகவும் கடந்த சில நாட்களாக மற்றொரு தகவலும் சமூக வலைதளங்களில் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.