நல்லூர் சுங்கச்சாவடியில் மழைநீர் தேக்கம் - போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் அவதி

Su.tha Arivalagan
Dec 02, 2025,04:12 PM IST

- க.பிரியா


சென்னை: சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள செங்குன்றம் அருகே உள்ள நல்லூர் சுங்கச்சாவடி பகுதியில், அண்மையில் பெய்த கனமழையின் காரணமாக அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.


இந்தச் சாலை சென்னை மற்றும் வடமாநிலங்களுக்குச் செல்லும் மிக முக்கியமான பாதையாகும். தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அனைத்து வாகனங்களும் மழைநீரில் மெதுவாக ஊர்ந்தபடி கடந்து செல்ல வேண்டியிருப்பதால், போக்குவரத்து ஸ்தம்பித்தது போன்ற நிலை ஏற்பட்டுள்ளது.


சுங்கச்சாவடி நிர்வாகம் சாலை பராமரிப்புக்காக சுங்கக் கட்டணம் வசூலிக்கும் நிலையில், மழைநீர் தேக்கத்தால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.




வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி, சுங்கச்சாவடி நிர்வாகம் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாகத் தலையிட்டு, தேங்கியுள்ள மழைநீரை அகற்றி, சீரான போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


(க.பிரியா, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)