சென்னையிலும், புறநகர்களிலும் ஜில் ஜில் மழை.. சிலுசிலுவென மாறிய கிளைமேட்.. என்ஜாய் பண்ணுங்க மக்களே!

Su.tha Arivalagan
Oct 27, 2025,11:40 AM IST

சென்னை: சென்னையிலும் புறநகர்களிலும் காலை முதல் லேசான தூறல் மழை பெய்து வருகிறது. மிகவும் மிதமாக பெய்து வரும் இந்த தூறலால் இதமான சீதோஷ்ணம் நிலவுகிறது. நல்ல குளிர்ச்சியும் கூடியிருக்கிறது. சூப்பராக என்ஜாய் செய்யக் கூடிய வகையிலான இந்த மழையை மக்கள் ரசித்துக் கொண்டுள்ளனர்.


மோன்தா புயல் தற்போது ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருவதாலும், அதன் வெளிப்புறப் பகுதி சென்னைக்கு அருகே இருப்பதாலும்தான் நமக்கு இந்த லேசான மழை கிடைத்துள்ளது. இந்தப் புயலால் பெரிய அளவிலான பாதிப்பு சென்னைக்கு ஏற்படாது என்று ஏற்கனவே இந்திய வானிலை மையமும் தெளிவுபடுத்தியுள்ளது. எனவே இந்த மழையை மக்கள் ஜாலியாக ரசித்து வருகிறார்கள்.


இந்த மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேனும் சிலாகித்து ஒரு போஸ்ட் போட்டுள்ளார். அவரது பதிவில், சமீப காலமாக, மிக கனமழைக்கான முன்னறிவிப்பு வரும்போதெல்லாம், ஒருவித அச்சம் ஏற்படுவது இயல்புதான். குறிப்பாக, 2015 மற்றும் 2023 வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது மிகவும் புரியும்.




ஆனால், இன்று பெய்யும் இந்தத் தொடர்ச்சியான மழை, தூறல், லேசான மழை, அவ்வப்போது தீவிர மழையுடன் இருப்பது நிச்சயமாக மகிழ்ச்சி அளிப்பதாக இருக்கும். இது நாளை காலை வரை நீடிக்கும். 


வட சென்னை முதல் பழவேற்காடு வரையிலான பகுதிகளில் மட்டும் சில நேரங்களில் கனமழை பெய்யக்கூடும், அதிலும் கடலுக்கு மிக அருகில் உள்ள பகுதிகளுக்கு கனமழை கிடைக்கும். மற்றபடி பெரும்பாலும் இன்று (Montha புயல் எதிரொலியாக) பெய்யும் மழையானது மிகவும் இதமானதாக இருக்கும்.


வட சென்னையில், தென் சென்னையை விட அதிக மழை கிடைக்கும், இது 50-70 மி.மீ வரை இருக்கலாம். மழை நாள் முழுவதும் பரவலாக இருக்கும்.


கடலில் இருந்து 2 கி.மீ-க்கு குறைவான தொலைவில் உள்ள பகுதிகளிலும் 50-70 மி.மீ வரை மழை பெய்யலாம். மழை நாள் முழுவதும் பரவலாக இருக்கும்.


தென் சென்னையில் 30-50 மி.மீ வரை மழை பதிவாகும். மழை நாள் முழுவதும் பரவலாக இருக்கும்.


கும்மிடிப்பூண்டி, பழவேற்காடு பகுதிகளில் சுமார் 100 மி.மீ வரை மழை கிடைக்கலாம். மழை நாள் முழுவதும் பரவலாக இருக்கும் என்று கூறியுள்ளார்.


உண்மைதான் இந்த மழையைப் பார்க்கவே அத்தனை சூப்பராக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது. எப்போது பார்த்தாலும் வெள்ளம் வருமோ என்ற அச்சத்திற்குப் போகும் சென்னை மக்களை இந்த மழை நிச்சயம் ஆசுவாசப்படுத்தி மகிழ்ச்சியாக்கியுள்ளது. ஜாலியா என்ஜாய் பண்ணுங்க மக்களே.