தமிழ்நாடு முழுவதும் பரலாக நல்ல மழை.. சென்னையை டோட்டலாக கூலாக்கிய தொடர் மழை!

Su.tha Arivalagan
May 19, 2025,07:10 PM IST

சென்னை: சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்கள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்துள்ளது. சென்னையில் தொடர்ந்து விட்டு விட்டு லேசான மழை பெய்து வருவதால் குளிர்ச்சிப் பிரதேசமாக சென்னையும், புறநகர்களும் மாறியுள்ளன. கோடை காலத்திலேயே ஊட்டி போன்ற சீதோஷ்ண சூழலுக்கு சென்னை மாறியுள்ளது.


தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 10 மணி வரை மழை பெய்யக் கூடிய வாய்ப்புள்ள மாவட்டங்கள் குறித்த முன்னறிவிப்பையும் அது வெளியிட்டுள்ளது.




சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பரவலாக இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும்.


நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், ஈரோடு, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும்.


புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டனம் மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


தமிழ்நாடு முழுவதும் தற்போது கத்திரி வெயில் இருந்து வரும் நிலையில் கடந்த சில நாட்களாக இந்த சூழல் முற்றிலுமாக மாறி வெயில் குறைந்து விட்டது. இந்த நிலையில் தற்போது பரவலாக மழையும் சேர்ந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


தமிழ்நாடு வெதர்மேன் அப்டேட்


சென்னை மழை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார். அதில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சாலிடான மழை தொடரும். சில நேரங்களில் இது அடர்த்தியாகவும் இருக்கும். அதன் பிறகு தொடர்ந்து மழை பெய்யும்.


சென்னைக்கு இந்த மழை முக்கியமானது, தேவையானது. வட தமிழ்நாடு முழுவதுமே நல்ல மழை பெய்து வருகிறது. மழைக்காலம் போன்ற சூழல் தற்போது நிலவுகிறது என்று கூறியுள்ளார்.