பராமரிப்பு பணி...21 நாட்களுக்கு சென்னை புறநகர் ரயில் சேவையில் மாற்றம்

Su.tha Arivalagan
Apr 27, 2026,03:23 PM IST

சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதி மக்களின் முக்கிய போக்குவரத்து வாழ்வாதாரமாக விளங்கும் மின்சார ரயில் சேவையில், பராமரிப்புப் பணிகள் காரணமாக முக்கிய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அரக்கோணம் ரயில் நிலைய யார்டில் மேற்கொள்ளப்படவுள்ள பொறியியல் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வரும் 21 நாட்களுக்கு சில புறநகர் ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாகவும், சில ரயில்கள் பாதியிலேயே நிறுத்தப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த சேவை மாற்றங்கள் ஏப்ரல் 26 முதல் மே 17, 2026 வரையிலான காலக்கட்டத்தில் அமலில் இருக்கும்.


முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள் :




அரக்கோணம் - திருத்தணி இடையே இயக்கப்படும் அதிகாலை நேர ரயில்கள் மற்றும் இரவு நேர ரயில்கள் மே 17-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன. அவற்றின் விவரம் பின்வருமாறு:


அரக்கோணம் டூ திருத்தணி: அரக்கோணத்தில் இருந்து அதிகாலை 4:00 மணி மற்றும் 5:00 மணிக்கு புறப்பட்டு திருத்தணி செல்லும் ரயில்கள் (வண்டி எண்: 43551, 43553) மே 17 வரை இயங்காது.


திருத்தணி டூ அரக்கோணம்: திருத்தணியில் இருந்து இரவு 9:15 மணி மற்றும் 11:10 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் ரயில்கள் (வண்டி எண்: 43552, 43554) மே 16-ம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.


பகுதியளவு ரத்து மற்றும் சேவை மாற்றங்கள் :


பயணிகளின் வசதிக்காக சில ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படாமல், குறிப்பிட்ட நிலையங்கள் வரை மட்டும் இயக்கப்பட உள்ளன.


மூர்பார்க்கெட் (MMC) - அரக்கோணம்: காலை 11:00 மணிக்கு மூர்பார்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்திலிருந்து புறப்படும் ரயில், திருவலாங்காடு வரை மட்டுமே இயக்கப்படும். அங்கிருந்து அரக்கோணம் வரையிலான சேவை ரத்து செய்யப்படுகிறது.


திருத்தணி - மூர்பார்க்கெட் (MMC): மதியம் 12:35 மணிக்கு திருத்தணியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், திருத்தணிக்கு பதிலாக திருவலாங்காட்டில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கும்.


இரவு நேர சேவை: மூர்பார்க்கெட் காம்ப்ளக்ஸ் நிலையத்திலிருந்து இரவு 10:55 மணிக்கு புறப்படும் அரக்கோணம் ரயில், திருவலாங்காடு வரை மட்டுமே செல்லும்.


பயணிகளுக்கு வேண்டுகோள் :


ரயில் நிலைய யார்டு பகுதியில் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக இந்த 'லைன் பிளாக்' (Line Block) செய்யப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர், அரக்கோணம் மற்றும் திருத்தணி மார்க்கமாக பயணிக்கும் அலுவலகம் செல்வோர் மற்றும் பொதுமக்கள், இந்த கால அட்டவணையை கருத்தில் கொண்டு தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு தெற்கு ரயில்வே கேட்டுக் கொண்டுள்ளது. இந்த தற்காலிக மாற்றத்தினால் ஏற்படும் சிரமங்களுக்கு பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு ரயில்வே நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளது.