Chennai AC EMU Train service.. தொடங்கியது ஏசி புறநகர் ரயில் சேவை.. கட்டணம் தான் ஜாஸ்தி!
சென்னை: சென்னை மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்திருந்த குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. ஆனால் சேவை குறித்து சில குறைகளையும் பயணிகள் முன்வைத்துள்ளனர்.
சென்னை மாநகரின் முக்கிய பொது போக்குவரத்து சேவையில் புறநகர் ரயில் சேவைக்கு முக்கிய இடம் உண்டு. சென்னை மக்களின் மின்னல் வேக வாழ்க்கையில் மின்சார ரயில்களின் பங்கை மறக்க முடியாது. சென்னை நகர் மட்டுமல்லாமல் புறநகர மக்களையும், சென்னை நகரையும் இணைக்கும் பாலமாகவும் சென்னை புறநகர் ரயில் சேவை உள்ளது.
சென்னைக்கு வெளியே உள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நகர மக்களுக்கும் சென்னைக்கும் இடையிலான உறவில் இந்த புறநகர் ரயில் சேவைக்கு பிரதான இடம் உண்டு.
இந்த நிலையில் சென்னை புறநகர் ரயில் சேவையில் புதிய அம்சமாக இன்று முதல் குளிர்சாதன வசதி கொண்ட புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே இந்த புதிய ரயில் சேவை இன்று முதல் தொடங்கியுள்ளது. அதேபோல சென்னை கடற்கரை மற்றும் தாம்பரம் இடையே இன்னொரு குளிர்சாதன புறநகர் ரயில் சேவையும் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் சேவையானது சென்னை கடற்கரை டூ செங்கல்பட்டு மற்றும் தாம்பரம் இடையே இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மட்டும் சேவை கிடையாது. வாரத்தின் மற்ற 6 நாட்களும் இந்த சேவை இருக்கும். இந்த ரயிலில் குறைந்தபட்ச கட்டணம் ரூ. 35.
செங்கல்பட்டு ரயில் எல்லா ஸ்டேஷனிலும் நிற்காது
குளிர்சாதன வசதி கொண்ட மின்சார ரயில் அனைத்து நிலையங்களிலும் நிற்காது. மாறாக குறிப்பிட்ட ரயில் நிலையங்களில் மட்டுமே நின்று செல்லும். அதன்படி சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை செல்லும் ரயிலானது, சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், மாம்பலம், கிண்டி, புனித தாமஸ் மலை, திரிசூலம், தாம்பரம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பொத்தேரி ஹால்ட், சிங்கப்பெருமாள் கோவில், பரணூர் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல சென்னை கடற்கரையிலிருந்து தாம்பரம் வரை செல்லும் ரயில் நிற்கும் நிலையங்கள் - சென்னை கோட்டை, பூங்கா, எழும்பூர், சேத்துப்பட்டு, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, கிண்டி, புனித தாமஸ் மலை, பழவந்தாங்கல், மீனம்பா்கம், திரிசூலம், பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம் சானட்டோரியம் ஆகிய நிலையங்களில் வழக்கம் போல நின்று செல்லும்.
பயணிகள் வரவேற்பு + குறைகள்
இந்த புதிய ஏசி ரயில் சேவைக்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேசமயம், செங்கல்பட்டு ரயிலும் அனைத்து நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல டிக்கெட் கட்டணமும் அதிகமாக இருப்பதாகவும் பயணிகள் கூறியுள்ளனர். அதைக் குறைக்க வேண்டும் என்பது அவர்களது கருத்தாகும்.
அதை விட முக்கியமாக ரயில் சேவை நேரமானது பகலில் இல்லை. வெயில் கொளுத்துவது பகலில்தான். அப்படிப்பட்ட நிலையில் பகலில் ஏசி ரயிலை இயக்காமல் காலையிலும், மாலையிலும் இயக்குவது சரியாக இருக்காது. எனவே பகலிலும் ஏசி ரயில் இயங்குவதே பொருத்தமாக இருக்கும் என்பது பயணிகளின் எண்ணம்.
ஞாயிற்றுக்கிழமை ஏசி ரயில்களுக்கு விடுமுறை என்பதையும் பயணிகள் விமர்சித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை அதிக அளவிலான மக்கள் வெளியில் வருவார்கள். எனவே ஞாயிற்றுக்கிழமையும் ஏசி ரயில் இயங்க வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.