சென்னையில் ஒரு விழா... உணவு திருவிழா.. ஜாலியா சுத்திப் பாத்துட்டு.. வயிறு முட்ட சாப்பிடுங்க!
ஆ.வ.உமாதேவி
சென்னை: சென்னையில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உணவுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 21/ 12 /2025 முதல் 28/ 12/ 2025 வரை சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணவு திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
அதாவது நாளைதாங்க கடைசி நாள்.. ஸோ, இதைப் படிச்சுட்டு உடனே பெசன்ட் நகர் கிளம்பிப் போய்டுங்க.. மத்தத அங்க பாத்துக்கலாம்.
வகை வகையான உணவுகள், தனித்தனி பிரிவுகளில் வைக்கப்பட்டு, உணவு பிரியர்கள் உண்டு மகிழ பல வகையான உணவு வகைகள். இப்படிப்பட்ட விழாக்களை நம் அரசு ஊக்குவிப்பது சிறப்பான விஷயமாகும்.
வாரீர்! வாரீர்! உண்டு மகிழ வாரீர்!
செல்வீர்! செல்வீர்! வீட்டிற்கு வாங்கி செல்வீர்!
கொடுப்பீர்! கொடுப்பீர்! உறவுக்கெல்லாம் கொடுப்பீர் !
பகர்வீர்! பகர்வீர்! அக்கம் பக்கம் பகர்வீர்!
ரசிப்பீர்! ரசிப்பீர்! உண்டதை எண்ணி ரசிப்பீர்!
நிறுத்துவீர்! நிறுத்துவீர்! நாவில் சுவையை நிறுத்துவீர்!
மகிழ்வீர்! மகிழ்வீர்! உணவு திருவிழாவை எண்ணி மகிழ்வீர்!
காத்திருப்பீர்! காத்திருப்பீர்! அடுத்த உணவு திருவிழாவிற்காக!
சரி, பொதுவாக உணவு குறித்த சில தகவல்களை அறிந்து கொள்வோமா!
உணவு என்பது நம் உடல் வளர்ச்சிக்கும் ஆரோக்கியத்திற்கும் தேவையான மிக முக்கியமான ஒன்று. உணவை எடுத்துக் கொள்ளும் போது தான் நமக்கு ஆற்றலும் கிடைக்கிறது. அவ்வாற்றல் இல்லையெனில் நம்மால் எந்த வேலையும் செய்ய இயலாது. அவ்வாறு உண்ணும் உணவு, சத்து நிறைந்ததாகவும் சுத்தமானதாகவும் பாரம்பரியமானதாகவும் இருத்தல் அவசியம்.
பாரம்பரிய உணவின் பயன்பாடு குறைய குறைய பல உடல் நலக் குறைபாடுகள் ஏற்பட ஆரம்பிக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் பலர் துரித உணவு பிரியர்களாக மாறிப் போனதால், பல நிரந்தர( நீரிழிவு, இதய நோய், ரத்த அழுத்தம்) நோய்கள் தலை தூக்குகின்றன.
அடித்தளம் சரியாய் அமைந்தால்தானே, கட்டிடம் சரியாக நிற்கும். நம் உடலென்னும் கட்டிடத்திற்கு உணவு என்னும் அடித்தளத்தை நாம் சரியாக போட வேண்டும். அப்படியானால், நாம் பாரம்பரிய உணவுக்கு மாற வேண்டும். உணவு என்பது சுவைக்காக மட்டுமல்ல. நம் ஆரோக்கியத்திற்கும் தான். எனவே, சிறுதானிய வகைகள், பருப்பு வகைகள், கீரைகள், காய்கறிகள், பழங்களை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக அந்தந்த பகுதியில் வாழும் மக்கள் அந்தந்த பகுதியில் விளையும், உணவு வகைகளையே பெரும்பாலும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நாம் இருக்கும் சூழ்நிலைக்கு ஏற்ற உணவை நம் இயற்கை தான் தீர்மானிக்கிறது. அதை விடுத்து நாம் இறக்குமதி செய்யப்படுபவனவற்றை சாப்பிடுவது அவ்வளவு நல்லதல்ல. ஏனெனில் அவை நம் கைகளில் தவழ வருவதற்கு முன்பே பலவித வேதிப்பொருள்களைக் கொண்டு பாதுகாப்பு என்ற பெயரில் நச்சாக்கப்படுகின்றன.
தற்காலத்தில் உடல் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவேதான், இத்தகைய உணவு திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பள்ளிகளில் கூட பெற்றோர் உதவியுடன் சின்ன சின்ன உணவுத் திருவிழாக்களை நடத்தி சத்துள்ள உணவு, சரிவிகித உணவு, சுத்தமான உணவு, சுகாதார உணவு பற்றி எல்லாம் மாணவர்களுக்கு எடுத்துச் சொல்லலாம்!
ஓகே.. பாடம் படிச்சாச்சா.. அடுத்து என்ன கட்டைப் பையுடன், கெட்டப்பாக குடும்பத்தோடு ஒரு செட்டப்பாக,
பெசன்ட் நகர் கடற்கரைக்கு செல்ல தயாரிகிவிட்டீர்கள் தானே!
(ஆ.வ. உமாதேவி, இடைநிலை ஆசிரியர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ஒன்றியம், முருக்கம்பட்டு காலனியைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியி்ல் பணியாற்றுகிறார்)