Bow bow.. செல்லப் பிராணிகளின் உரிமம் பெற.. காலக்கெடு டிச. 14 வரை நீட்டிப்பு!
- சரளா ராம்பாபு
சென்னை: சென்னையில் தொடர் மழை பெய்து வந்ததாலும், இன்னும் மழை அவ்வப்போது பெய்து வருவதாலும், செல்லப் பிராணிகளுக்கான உரிமம் பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று அவற்றின் உரிமையாளர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்று டிசம்பர் 14ம் தேதி வரை அவகாசத்தை மாநகராட்சி நீட்டித்துள்ளது.
இந்தக் கால அளவு முதலில் நவம்பர் 23ம் தேதியாக இருந்தது. பின்னர் டிசம்பர் 7 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. தற்போது தொடர் மழையின் காரணமாக கால அவகாசம் மேலும் ஒரு வாரம் தரப்பட்டுள்ளது.
தெரு நாய்கள் மற்றும் செல்ல பிராணிகளின் அச்சுறுத்தல் மற்றும் கடித்தல் போன்றவை பெரு நகரங்களில் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த செல்லப்பிராணிகளுக்கு கட்டாய உரிமம் வழங்கும் திட்டத்தை சென்னை மாநகராட்சி முன்னெடுத்துள்ளது. இது மக்களுக்கு பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும் நாய்க்கடிகள் போன்றவற்றை கட்டுப்படுத்தவும் அரசாங்கத்திற்கு உதவுகிறது.
செல்லப்பிராணிகளின் உரிமம் பெற உரிமையாளர்களின் முகவரி சான்று, நாயின் தடுப்பூசி சான்று, புகைப்படம் போன்றவை அவசியம். இந்த உரிமம் பெறுதல் மூலம் நாய்களின் உடல்நலம் மற்றும் தடுப்பூசி போன்ற முக்கிய தகவல்களை பராமரித்து அரசுக்கு வழங்க முடியும். நாய்கள் தொலைந்து விட்டாலும் உரிமத்தில் உள்ள தகவல்கள் மூலம் அவற்றை எளிதாக கண்டறிந்து அதனை உரிமையாளர்களிடம் சேர்க்க வழிவகுக்கிறது.
பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் திரு. வி. க. நகர், மீனம்பாக்கம் போன்ற ஆறு சிகிச்சை மையங்களிலும் மேலும் சோழிங்கநல்லூர் நாய் இன கட்டுப்பாட்டு மையத்திலும் மைக்ரோசிப் பொருத்துதல் வெறிநாய்க்கடிக்கான நோய் தடுப்பூசி நாய்களுக்கு செலுத்துதல் செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு அதற்கான உரிமம் வழங்குதல் முதலிய சேவைகள் தினசரி காலை 8:00 மணி முதல் மாலை 3 மணி வரை இலவசமாக எல்லா நாட்களிலும் வழங்கப்பட்டு வருகிறது. எனவே இந்த சேவையை செல்ல பிராணிகளின் உரிமையாளர்கள் சரியாகப் பயன்படுத்தி தங்கள் செல்லப் பிராணிகளின் உரிமத்தை கட்டாயம் பெற்றுக் கொள்ள வேண்டும். மீறினால் அபராதம் செலுத்தவும் நேரிடலாம்
சென்னை மாநகராட்சியில் இதுவரை கிட்டத்தட்ட 92 ஆயிரம் செல்ல பிராணிகளின் விபரங்கள் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் 45,916 செல்லப்பிராணிகளுக்கு உரிமம் வழங்கி தகவல்கள் சேகரிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது.
(சரளா ராம்பாபு, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)