சென்னையில் சொத்து வரி கிடுகிடு உயர்வா.. மாநகராட்சி தரும் விளக்கம் என்ன?

Su.tha Arivalagan
Aug 12, 2026,11:52 AM IST

சென்னை: சென்னையில் சொத்து வரி அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள புகார்களுக்கு மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.


சென்னையில் சொத்து வரி பெருமளவில் உயர்த்தப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பலரும் சமூக வலைதளங்களில் புலம்பி வருகின்றனர். இதுகுறித்து தற்போது சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார்.


இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள விளக்க அறிக்கை:


பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை.




பெருநகர சென்னை மாநகராட்சியில், குறைவான மதிப்பீடு / தவறான மதிப்பீட்டின் அடிப்படையில் சொத்து வரி செலுத்தி வந்த சொத்து உரிமையாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களுக்குத் திருத்தப்பட்ட வரி கேட்பு நோட்டீஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடப் பரப்பளவு முரண்பாடுகள் ஜி.ஐ.எஸ் (GIS), செயற்கைக்கோள் தரவுகள், பிற அரசுத் தரவுகள் மற்றும் உரிமையாளர்களின் சுய விவரப் பிரகடனம் (Self Declaration) ஆகியவற்றின் மூலம் கண்டறியப்பட்டுள்ளன.


இந்தத் திருத்தப்பட்ட வரி மதிப்பீட்டின் மீது ஏதேனும் ஆட்சேபனை இருப்பின், நோட்டீஸ் கிடைக்கப்பெற்ற 15 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட மண்டல துணை ஆணையரிடம் (Regional Deputy Commissioner) மேல்முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய மேல்முறையீடுகள் 30 நாட்களுக்குள் பரிசீலிக்கப்பட்டுத் தீர்வு காணப்படும்.


எனவே, பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளதாகப் பரப்பப்படும் தவறான வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது என்று ஆணையர் தெரிவித்துள்ளார்.