எடப்பாடி பழனிச்சாமி மனு தள்ளுபடி.. அதிமுக பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்தா?

Su.tha Arivalagan
Aug 01, 2025,07:30 PM IST

சென்னை : அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை நிராகரிக்க கோரிய எடப்பாடி பழனிச்சாமியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.


அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதை எதிர்த்து சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நிராகரிக்கும் படி, எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த சென்னை உரிமையியல் நீதிமன்றம், கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். விதிகளின்படி பொதுச் செயலாளர் தேர்வானார் என தெரிவிக்கவில்லை என கூறி எடப்பாடி பழனிச்சாமியின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.




அது மட்டுமின்றி, பொதுக்குழு தீர்மானம் மூலம் பழனிசாமியை பொதுச் செயலாளராக தேர்வு செய்ததற்கு எதிரான வழக்கு செல்லும். திண்டுக்கல்லை சேர்ந்த சூரிய மூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு உரியது என்றும் கோர்ட் தெரிவித்துள்ளது. கோர்ட்டின் இந்த உத்தரவு அதிமுக.,வில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.


கட்சியின் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும் என கோர்ட் தெரிவித்துள்ளதால் எடப்பாடி பழனிச்சாமியின் பொதுச் செயலாளர் பதவிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் பொதுக்குழுவில்தான் எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளர் ஆனதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணைக்கு ஏற்புடையது என கோர்ட் தெரிவித்துள்ளதால் விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது. அப்படி விசாரணை நடத்தப்பட்டு, இபிஎஸ் பொதுச் செயலாளர் ஆனதற்கு எதிராக தீர்ப்பு வந்தால், அதிமுக.,வின் நிலைப்பாடு என்னவாக இருக்கும்? அடுத்த பொதுச் செயலாளர் யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது.