நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை

Su.tha Arivalagan
Jan 07, 2026,04:09 PM IST

சென்னை : நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை விமர்சித்து எழுதப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டிற்கு சென்னை ஐகோர்ட் அதிரடி தடை விதித்துள்ளது. மேலும் அந்த புத்தகத்தை பதிப்பித்த பதிப்பகத்திற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.


மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் சமீபத்தில் ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தார். இதில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்  என நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அனுமதி அளித்திருந்தார். இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து, அவருக்கு எதிராக பல்வேறு அவதூறு கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வந்தது. அதோடு அவருக்கு எதிராக 'கீழைக்காற்று' (Keezhaikaatru) பதிப்பகம் சார்பில் ஒரு புத்தகம் தயாரிக்கப்பட்டது. அந்தப் புத்தகத்திற்கு "திருப்பரங்குன்றம் விவகாரம்: ஜி.ஆர்.எஸ் நீதிபதியா அல்லது...?" என்று பெயரிடப்பட்டிருந்தது.




இந்தப் புத்தகத்தின் அட்டையில் நீதிபதியை அவதூறாகச் சித்தரிக்கும் வகையில் கேலிச்சித்திரம் இடம்பெற்றிருப்பதாக வழக்கறிஞர் நவீன் பிரசாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி அருள் முருகன் தலைமையிலான அமர்வு பின்வரும் கருத்துகளைத் தெரிவித்தது:


ஒரு பொறுப்பில் இருக்கும் நீதிபதி குறித்து இவ்வளவு மோசமான தலைப்பு மற்றும் கேலிச்சித்திரங்களைப் பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது. தீர்ப்புகளை விமர்சிக்க யாருக்கும் உரிமை உண்டு. ஆனால் தனிப்பட்ட முறையில் நீதிபதியைத் தாக்குவதும், அவமதிப்பதும் கருத்து சுதந்திரத்திற்குள் வராது. புத்தகத்தில் உள்ள வரிகள் நீதிபதியை கொச்சைப்படுத்துவதாக உள்ளது. அறிவுசார் தளமான புத்தக கண்காட்சியில் இது போன்ற புத்தகங்களை அனுமதிக்க முடியாது. இந்தப் புத்தகத்தைப் பதிப்பித்த 'கீழைக்காற்று' பதிப்பகம் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையைத் தொடங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ஜனவரி 8-ம் தேதி முதல் தொடங்க உள்ள சென்னை புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகத்தை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அந்தப் புத்தகத்தின் வெளியீடு மற்றும் விநியோகத்திற்குத் தடை விதித்த நீதிமன்றம், ஏற்கனவே அச்சிடப்பட்ட பிரதிகள் அனைத்தையும் உடனடியாகப் பறிமுதல் செய்யத் தமிழக அரசுக்கு ஆணையிட்டது. இந்தத் தீர்ப்பு நீதித்துறையின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.