அம்பாசமுத்திரம், பெருந்துறை இடைத்தேர்தல் நடத்த தடையில்லை ; 3 தொகுதிகளுக்கு தடை நீடிப்பு

Su.tha Arivalagan
Nov 27, 2026,11:04 AM IST

சென்னை : அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதே சமயம், திருச்சி கிழக்கு, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய மூன்று தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்கு முடியும் வரை இடைத்தேர்தலுக்குத் தடை தொடரும் எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.   


தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா செய்ததை அடுத்து அம்பாசமுத்திரம், பெருந்துறை, கரூர், விராலிமலை ஆகிய 4 தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. அதை போல் முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றான திருச்சி கிழக்கு தொகுதி பதவியை அவர் ராஜினாமா செய்ததால் அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த தொகுதிகளில் தேர்தல் வழக்குகள் பல நிலுவையில் இருந்ததால் இந்த 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட் தடை விதித்து இருந்தது. 




இந்நிலையில் 5 தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் விசாரணைகள் முடிந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சென்னை ஐகோர்ட் வழங்கி உள்ள தீர்ப்பின் படி, அம்பாசமுத்திரம் மற்றும் பெருந்துறை ஆகிய இரண்டு தொகுதிகளில் மட்டுமே இடைத்தேர்தல் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் திருச்சி கிழக்கு, கரூர், விராலிமலை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வழக்குகள் முடிந்தால் மட்டுமே திருச்சி கிழக்கு, கரூர் மற்றும் விராலிமலை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த அனுமதி வழங்க முடியும் என்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.


அம்பாசமுத்திரம், பெருந்துறை ஆகிய தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளதால் இந்த இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் கமிஷன் சார்பில் தெரிவிக்கப்பட்ட பதிலில், எஸ்எஸ்ஆர் பணிகள் நிறைவடைந்ததும் டிசம்பர் 20ம் தேதிக்குள் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளிலும் இடைத்தேர்தலை நடத்தி முடிக்க தயாராக உள்ளதாக கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.