கூலி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கோரிய மனு தள்ளுபடி
சென்னை : ரஜினி நடித்த கூலி படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என கோரி சென்னை ஐகோர்ட்டில் பட தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை கோர்ட் இன்று தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், ரஜினி நடித்து வெளியான ஆக்ஷன் த்ரில்லர் படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம், ஆகஸ்ட் 14ம் தேதி உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீசாகி, கலவையான விமர்சனங்களை பெற்றது. ரஜினியின் 171 வது படமாக வெளியாகி உள்ள கூலி, படத்திற்கு இந்திய சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது. ஆனால் உலகின் மற்ற நாடுகளில் இது யு/ஏ சான்றிதழுடன் ரிலீஸ் செய்யப்பட்டது.
கூலி, கேங்ஸ்டர் படம் என்பதால் இதில் வன்முறை காட்சிகள் அதிகம் இடம்பெற்றிருந்ததால் இதற்கு சென்சார் போர்டு ஏ சான்றிதழ் வழங்கி இருந்தது. ஆனால் இதனை நீக்கும் படி, தயாரிப்ப நிறுவனத்தின் சார்பில் சென்சார் போர்டுக்கு விண்ணப்பம் அளித்திருந்தது. ஆனால், வன்முறை காட்சிகளை நீக்கி வெளியிட்டால் மட்டுமே யு/ஏ சான்றிதழ் வழங்க முடியும் என சென்சார் போர்டு திட்டவட்டமாக தெரிவித்து விட்டது. ஆனால் அனைத்து காட்சிகளும் படத்தின் கதைக்கு மிக முக்கியமானவை கூறி படக்குழு சில காட்சிகளை நீக்க மறுத்து விட்டது.
படத்தின் வன்முறை காட்சிகள் மற்றும் ஏ சான்றிதழ் காரணமாக, கூலி படம் தியேட்டர்களில் ரிலீசாகி 15 நாட்கள் ஆகியும் இதுவரை ரூ.269 கோடிகளை மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் படத்திற்கு அளித்துள்ள ஏ சான்றிதழை நீக்கி விட்டு யுஏ சான்றிதழ் வழங்க சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில் சன் பிக்சர்ஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.