சமூக வலைதளங்களில் இளையராஜா படத்தை பயன்படுத்த தடை: சென்னை உயர்நீதி மன்றம்
சென்னை: யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக உள்ளவர் இளையராஜா. இவர் சமீபகாலமாக தன் புகைப்படங்களை பயன்படுத்தி வருமானம் பார்க்கும் சோனி உள்ளிட்ட இசை நிறுவனங்கள், யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
பல்வேறு ஊடகங்கள், இணையதளங்கள், இசை நிறுவனங்கள் ஆகியவை இளையராஜாவின் பாடலையும், புகைப்படங்களையும் அனுமதியில்லாமல் பயன்படுத்தி வருவதாகவும், அதனை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், அவ்வாறு பயன்படுத்துவதால் கிடைக்கும் வருமானம் தொடர்பான தகவல்களையும் கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு இன்று நீதிபதி செந்தில்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பெயர் புகைப்படங்களை பயன்படுத்தினால் என்ன தவறு. அதனால் உங்கள் புகழ் தான் பரவும் என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு இளையராஜா தரப்பில், தன்னை அடையாளப்படுத்தும் புகைப்படம், பெயர், இசைஞானி பட்டம், குரல் சுகியவற்றை பயன்படுத்தி வருவாய் ஈட்டுகிறார்கள். சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். எனவே தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பெயர், புனைப்பெயர், புகைப்படம் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது.
இதன்பின்னர் நீதிபதி, வருவாய் நோக்குடன் சமூகவலைதளங்களில் இளையராஜா புகைப்படங்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பான விசாரணை 4 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.