ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பா..? வானிலை மையம் விளக்கம்!

Manjula Devi
Apr 09, 2025,05:45 PM IST

சென்னை: வங்கக்கடல் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பில்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


 தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டில் டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ராமேஸ்வரத்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதற்கிடையே தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று ஆழ்ந்த காற்றழுத்து தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. இது புயலாக மாறுமா என்ற அச்சம் மக்களிடையே நிலவி வந்தது.




இந்த நிலையில் இதற்கு விளக்கம் அளித்து சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி 

தெற்கு வங்க கடலின் மத்திய பகுதிகளில் நிலவிவரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடக்கு-வடமேற்கு திசையில், மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நகர்ந்து படிப்படியாக வலு குறைய கூடும். இது புயலாக மாற வாய்ப்பில்லலை. 


மேலும் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் இருந்து தென் தமிழகம் வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக வரும் 14ஆம் தேதி வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக அறிவித்துள்ளது.


அதேசமயம் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் வழக்கத்தை விட வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.