நடப்பாண்டில் முன் கூட்டியே துவங்கியது.. தென்மேற்கு பருவமழை.. தமிழ்நாட்டுக்கு வாய்ப்பு எப்படி..?
சென்னை: தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொதுவாக தென்மேற்கு பருவமழை ஒவ்வொரு வருடமும் மே நான்காவது வாரத்தில் தொடங்க கூடும். இதனைத் தொடர்ந்து கேரளாவில் ஜூன் 1ம் தேதி வாக்கில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். ஆனால் இந்த வருடம் தென்மேற்கு பருவமழை பத்து நாட்கள் முன்கூட்டியே மே 13ஆம் தேதி வாக்கில் தொடங்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தற்போது தொடங்கியது. தென் கிழக்கு அந்தமான் மற்றும் அந்தமான் நிக்கோபார் தீவுகளிலும் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்கியது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இன்று முதல் 16 ஆம் தேதி வரை, இடி மின்னலுடன், மணிக்கு, 30 முதல் 40 கி.மீ., வேகத்தில் பலத்த காற்றுடன் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
நாளை கனமழை:
நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில், ஒரு சில இடங்களில், நாளை கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நாளை மறுநாள் கன மழை:
நீலகிரி, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
16ஆம் தேதி கனமழை:
கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர் மற்றும் வேலூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, மற்றும் காரைக்காலில், ஒரு சில இடங்களில் இன்றும், நாளையும் அதிக பட்ச வெப்பநிலை, இயல்பை விட, 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளது.