சென்னை மெட்ரோ: பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில் இயக்க அனுமதி!
Feb 28, 2026,01:12 PM IST
சென்னை: சென்னை பூந்தமல்லி - வடபழனி இடையே மெட்ரோ ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டத் திட்டத்தில், வழித்தடம் 4-ன் கீழ் பூந்தமல்லி முதல் கலங்கரை விளக்கம் வரை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் முதற்கட்டமாக, பூந்தமல்லி டூ வடபழனி இடையேயான உயர்மட்டப் பாதையில் ரயில்களை இயக்குவதற்கான சோதனை ஓட்டங்கள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் முடிவடைந்த நிலையில், தற்போது அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
90 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில்களை இயக்கி 4 நாட்கள் ஆய்வு மேற்கொண்ட நிலையில், ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம்.சவுத்ரி பாதுகாப்பு சான்றிதழ் வழங்கியுள்ளார். முதற்கட்டமாக பூந்தமல்லி -வடபழனி இடையே ஓட்டுநர் இல்லாத மெட்ரோ சேவை தொடங்கப்படுகிறது.
இந்த வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும்போது, சென்னையின் புறநகர் பகுதியான பூந்தமல்லியில் இருந்து வடபழனி போன்ற முக்கிய வணிகப் பகுதிகளுக்கு மிகக் குறுகிய நேரத்தில் பயணிக்க முடியும். கடந்த சில மாதங்களாக இந்தப் பாதையில் ரயில்களின் இயக்கம் மற்றும் சிக்னல் அமைப்புகள் தீவிரமாகச் சோதிக்கப்பட்டு வந்தன. பாதுகாப்பு ஆணையத்தின் இறுதி ஒப்புதலுக்குப் பிறகு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இந்த வழித்தடம் விரைவில் திறந்து வைக்கப்பட உள்ளது.