சென்னையில் விஜய்யின் 'ரோடு ஷோ'வுக்கு அனுமதி மறுப்பு: தவெக தொண்டர்கள் அதிர்ச்சி

Su.tha Arivalagan
Mar 26, 2026,01:20 PM IST

சென்னை: தமிழக அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், சென்னையில் நடத்தத் திட்டமிட்டிருந்த தேர்தல் பிரச்சார 'ரோடு ஷோ' நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.


திட்டமிடப்பட்ட தேர்தல் பிரச்சாரம் :


தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், தனது கட்சியின் வேட்பாளர்களை விரைவில் அறிமுகம் செய்து வைப்பார் என சொல்லப்பட்டு வருகிறது. தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வருவதால் சென்னையில் உள்ள 5 முக்கியத் தொகுதிகளில் நாளை மற்றும் மறுநாள் (மார்ச் 27 மற்றும் 28) ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரிக்கத் திட்டமிடப்பட்டிருந்தது. மக்களிடையே நேரடியாகச் சென்று ஆதரவு திரட்டுவது மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த விரிவான பிரச்சாரப் பயணம் வடிவமைக்கப்பட்டிருந்தது.


காவல்துறை அனுமதி மறுப்பு ஏன்?




சென்னையின் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் இந்த ரோடு ஷோ நடத்தப்படவிருந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவற்றைக் காரணம் காட்டி சென்னை காவல்துறை இந்த அனுமதி மறுப்பை வழங்கியுள்ளதாகத் தெரிகிறது. சென்னையின் குறுகலான சாலைகளில் வாகனப் பேரணி நடத்தும் போது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை மற்றும் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்திரளான மக்கள் ஒரே நேரத்தில் கூடும் போது பாதுகாப்பு வழங்குவதில் உள்ள சவால்கள் குறித்துக் காவல்துறை தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி :


தேர்தல் பிரச்சாரத்திற்காகத் தீவிரமாகத் தயாராகி வந்த தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் இந்தத் தகவல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விஜய்யின் வருகையை முன்னிட்டு உற்சாகமாகக் காத்திருந்த ஆதரவாளர்களுக்கு இது ஏமாற்றமாக அமைந்துள்ளது. ஜனநாயக ரீதியில் பிரச்சாரம் செய்யத் தங்களுக்கு உரிமை உள்ளதாகவும், வேண்டுமென்றே தங்கள் கட்சியின் வளர்ச்சிக்குத் முட்டுக்கட்டைப் போடப்படுவதாகவும் தவெக நிர்வாகிகள் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தல் அறிவிப்பு வருவதற்கும் முன்பும் அனைத்து மாவட்டங்களிலும் விஜய்யின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்தல் அறிவிப்பு வந்த பிறகும் கூட அனுமதி மறுக்கப்பட்டுவதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


என்ன செய்ய போகிறார் விஜய்?


காவல்துறையின் இந்த முடிவை எதிர்த்து தவெக தரப்பில் நீதிமன்றத்தை அணுக வாய்ப்புள்ளதா அல்லது மாற்று வழிகளில் (பொதுக்கூட்டம் அல்லது அனுமதி வழங்கப்பட்ட பகுதிகளில் பிரச்சாரம்) பிரச்சாரத்தைத் தொடரப் போகிறார்களா என்பது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும், இந்த 'ரோடு ஷோ' அனுமதி மறுப்பு விவகாரம் தற்போது தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.