உங்க ஏரியாவுல எப்ப மழை பெய்யும்.. துணி காயப் போடலாமா?.. இப்படியும் ஒரு சைட் இருக்குங்க!
சென்னை: இது வட கிழக்குப் பருவ மழைக்காலம். மழை பெய்யக் கூடிய காலம். எப்ப மழை பெய்யும் என்பதைத் தெரிஞ்சுக்கிட்டாதான் மொட்டை மாடியில் துணி காயப் போட முடியும், ஏதாவது வற்றல், வடாம், மஞ்சள் என காய வைக்கணும்னாலும் காய வைக்க முடியும்.
இதை மனதில் வைத்து நம்ம பகுதியில் இப்போது மழை இருக்கா, எப்ப மழை பெய்ய வாய்ப்பிருக்கு என்பதை அறிய ஒரு இணையதளம் வந்துள்ளது.
Coastal Ocean & Monsoon Kronicles அதாவது Chennai Rains என்ற தனியார் வானிலை பிளாக்கர் தான் இந்த தளத்தை உருவாக்கியிருக்காங்க. மழைக்காலத்தில் மழை நிலவரம் குறித்த கணிப்புகளை துல்லியமாகச் சொல்வதில் இந்த தனியார் பிளாக்கரும் ஒரு முக்கியப் புள்ளி ஆவர்.
தற்போது மக்களுக்கு மேலும் பயன் அளிக்கும் வகையிலான மழைத் தகவலைத் தர புதிய வசதியை தங்களது இணையதளத்தில் ஏற்படுத்தியுள்ளனர்.
சென்னை மற்றும் தமிழகத்தின் வானிலை நிலவரங்களை ஆழமாகவும் நுணுக்கமாகவும் தெரிந்து கொள்ள இது மிகவும் பயனுள்ள மற்றும் சுவாரஸ்யமான ஒரு தளம் இது.
இதில் தற்போது புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள ஆப்ஷன்தான் துணி காயப் போடலாமா என்ற பகுதி. அதில் போய் உங்களது பகுதியின் பின்கோடைப் போட்டால் அடுத்த 2 மணி நேரத்திற்கு மழைக்கான வாய்ப்பு இருக்கா என்பது குறித்த தகவலை நாம் அறிந்து கொள்ள முடியும். அதாவது நாம் வசிக்கும் பகுதியிலிருந்து 20 கிலோமீட்டர் சுற்றளவு வரை மழை இருக்குமா, இல்லையா என்பதை இதில் சொல்கிறார்கள்.
நல்ல தகவல்தானே.. நீங்களும் செக் பண்ணிப் பாருங்க.