IPL 2026: கடைசி வரை போராட்டம்.. 10 ரன்கள் வித்தியாயசத்தில் வெற்றியை நழுவ விட்ட சென்னை சூப்பர் கிங்ஸ்
ஹைதராபாத்: ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான விறுவிறுப்பான ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதரைபாத் அணி வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் அபிஷேக் சர்மா வெறும் 15 பந்துகளில் அரைசதம் அடித்து சாதனை படைத்தார். அவர் 22 பந்துகளில் 59 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ஹென்றிச் கிளாசன் (59 ரன்கள்) அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்தினார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் ரன்களை வாரி வழங்கினாலும், பின்னர் சிறப்பாக மீண்டு வந்தனர். ஜேமி ஓவர்டன் மற்றும் அன்ஷுல் காம்போஜ் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். முகேஷ் சவுத்ரி பவர்பிளேயின் கடைசி ஓவரில் டிராவிஸ் ஹெட் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.
ஆனாலும் 194 ரன்களைக் குவித்து விட்டது ஹைதராபாத். அதைத் தொடர்ந்து 195 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி சென்னை அணி தனது சேஸிங்கைத் தொடங்கியது. ஆரம்பத்தில் அதிரடி காட்டினாலும் கூட சில முக்கிய விiக்கெட்களை சென்னை அணி பறி கொடுத்ததால் சேஸிங்கில் தடுமாற்றம் ஏற்பட்டது.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (19 ரன்கள்) மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் ஏமாற்றம் அளித்தனர். கடைசி நேரத்தில் மேத்யூ ஷார்ட் (34) மற்றும் சிவம் துபே போராடினர். இதில் ஷிவம் துபே ஆட்டமிழந்த நிலையில் அணியின் வெற்றி வாய்ப்பு கிட்டத்தட்ட பறி போய் விட்டது.
இறுதியில் 10 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியைத் தழுவியது. இதுவரை ஆடிய 6 போட்டிகளில் நான்கு தோல்விகள், 2 வெற்றிகளுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது.