சேப்பாக்கம் இனியும் சிஎஸ்கே கோட்டை இல்லை.. அபார வெற்றியைத் தட்டிய பஞ்சாப் கிங்ஸ்!
சென்னை: சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மீண்டும் ஒரு கசப்பான தோல்வியைக் கொடுத்துள்ளது ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான அணி. தனது கோட்டையான சேப்பாக்கம் மைதானத்தில் இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் தோல்வியைத் தழுவியது சென்னை சூப்பர் கிங்ஸ்.
ஏற்கனவே ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியைத் தழுவிய சென்னை, தனது சொந்த மைதானத்திலேயே தோல்வியைச் சந்தித்திருப்பது ரசிகர்களை சோர்வடைய வைத்துள்ளது.
இனறு நடைபெற்ற ஐபிஎல் 2026-ன் 7-வது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். சிஎஸ்கே முதலில் விளையாடி 209 ரன்களைக் குவித்தது. ஆரம்பத்தில் சொதப்பிய சென்னை பின்னர் சமாளித்து விளையாடி 200 ரன்களைக் கடந்து ஆறுதல் அளித்தது.
ஆனால் அது போதுமானதாக இல்லை என்பதை பஞ்சாப் அணியின் பேட்ஸ்மென் நிரூபித்து விட்டனர். 210 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய பஞ்சாப் கிங்ஸ் அதிரடியான தொடக்கத்தைத் தந்தது. பஞ்சாப் அணி வெறும் 3.2 ஓவர்களிலேயே 50 ரன்களை எட்டியது. இது ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஒரு அணி எடுத்த அதிவேக 50 ரன்கள் ஆகும்.
தொடக்க வீரர்களாக களம் இறங்கிய பிரப்சிம்ரன் சிங் மற்றும் பிரியான்ஷ் ஆர்யா அதிரடியாக ஆடினர். பிரியான்ஷ் ஆர்யா ஒரு கட்டத்தில் மேட் ஹென்றி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பொறுப்புடன் விளையாடி அரைசதம் (50) கடந்தார். அவர் ஆட்டத்தின் போக்கை பஞ்சாப் பக்கம் திருப்பினார்.
ஆஸ்திரேலிய வீரர் கூப்பர் கான்னொலி 21 பந்துகளில் 36 ரன்கள் எடுத்து அணிக்கு வலுசேர்த்தார். இது அணி மீதான நெருக்கடியை வெகுவாகக் குறைத்தது. ஆட்டத்தின் இறுதியில் அதிரடியாக விளையாடிய வதேரா, ஒரு சிக்ஸர் உட்பட முக்கிய ரன்களைச் சேர்த்தார்.
பஞ்சாப் கிங்ஸ் அணி இலக்கை நோக்கி மிக நெருக்கமாகச் சென்றது. கடைசி 24 பந்துகளில் 33 ரன்கள் தேவை என்ற நிலையில் போட்டி மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது. ஸ்ரேயாஸ் ஐயரின் விக்கெட் வீழ்ந்தாலும், பஞ்சாப் அணி இந்த பெரிய இலக்கை எட்டுவதற்கு தீவிரமாகப் போராடியது. அதற்குப் பலனும் கிடைத்தது. 19 ஓவர்களில் தனது இலக்கை எட்டி அசத்தலான வெற்றியை ஈட்டியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை அணி பெற்ற தொடர்ச்சியான 6வது தோல்வி இது என்பதால் ரசிகர்கள் பெரும் சோகமடைந்துள்ளனர்.