திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் கோயில்!

Su.tha Arivalagan
Nov 14, 2026,12:02 PM IST

- எம்.எல்.பிரபா


சென்னை திருநின்ற ஊரில் ஸ்ரீ பக்தவச்சல பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்ற திருத்தலம். மகாலட்சுமி சமுத்திர ராஜனிடம் கோபித்துக் கொண்டு வந்து இங்கே நின்றதால் இந்த ஊர் திருநின்றவூர் என பெயர் பெற்றது.


கோவிலில் உள்ளே செல்ல அழகான ராஜகோபுரம் உள்ளது. கோபுரத்தில் பெருமாளின் வடிவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்ததும் கொடிமரம் உள்ளது. பெருமாள் சன்னதிக்கு செல்லும் வழியில் உள்ள மண்டபத்தின் மேலே வெளிப்புறத்தில் பெருமாளின் தசாவதார சிற்பங்கள் உள்ளன.மூலவர் பெயர் ஸ்ரீ பக்தவத்சல பெருமாள் என்று அழைக்கப்படுகிறார். பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள் பாலிக்கிறார். உற்சவர் பெயர் 'பத்தராவிப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார்.


பெருமாள் சன்னதியின் வலது புறத்தில் தாயார் சன்னதி உள்ளது. தாயாரின் பெயர் "என்னைப் பெற்ற தாயார் "என்று அழைக்கப்படுகிறார். சமுத்திர ராஜனே தாயாரிடம் வந்து மன்னிப்பு கேட்டு என்னை பெற்ற தாயாரே என்று அழைத்து, வணங்கியதால் தாயாருக்கு இப்பெயர் வந்ததாக கூறப்படுகிறது. இது தவிர தாயாருக்கு சுதா வல்லி, மத்சவித்ரி என்றும் அழைக்கப்படுகிறது.




தாயார் சன்னதியின் பக்கத்தில் சக்கரத்தாழ்வார், ஆதிசேஷன், விஸ்வக்சேனர், சன்னதிகள் உள்ளன. ஆண்டாள் சன்னதியும் உள்ளது. பன்னிரு ஆழ்வார்கள், ராமானுஜர், மணவாள மாமுனிகள் , ஆஞ்சநேயர் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன.


திருமங்கை ஆழ்வார் இத்தலத்தில் பெருமாளை சேவிக்க வரும்போது நேரம் ஆகிவிட்டதால் கோவில் கதவு நடை சாத்தப்பட்டது.ஆகவே ஆழ்வார் பெருமாளை பற்றி பாசுரம் பாடாமல் மாமல்லபுரம் சென்று விட்டார். இதை அறிந்த தாயார் பெருமாளை பார்த்து "திருமங்கையாழ்வார் எல்லா தலங்களிலும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். நீரும் போய் அவரிடம் சென்று பாசுரங்களை பெற்று வாருங்கள்" என்று அனுப்பினாள். 


பெருமாளும் சென்று ஆழ்வாரிடம் ஒரு பாசுரத்தை பெற்று வந்தார். தாயாரோ மற்ற திருத்தலங்களில் அதிகமான பாடல்கள் பாடிய ஆழ்வாரிடம் ஒரு பாடல் மட்டும் வாங்கி வந்தால் போதாது. இன்னும் வேண்டும் என்று "திரும்பிச் சென்று வாங்கி வாருங்கள்" என்று பெருமாளை அனுப்பி வைத்தாள். பெருமாளும் சென்றார்.ஆனால் அதற்குள் திருமங்கை ஆழ்வாரோ "திருக்கண்ணமங்கை" என்ற ஊருக்கு சென்று விட்டார். பெருமாள் அந்த ஊருக்கும் சென்றார். திருமங்கை ஆழ்வார் அந்த பெருமாளைப் பற்றி பாசுரம் சேவிக்கும் பொழுது பக்தவச்சல பெருமாளுக்கும் இன்னொரு பாசுரம் பாடினார்.அந்த இரண்டு பாசுரங்கள் பெருமாள் சன்னதியில் செல்லும் வழியில் கதவிற்கு பக்கத்தில் எழுதப்பட்டுள்ளது. இதை நாம் படித்து தெரிந்து கொள்ளலாம்.


பக்தவத்சல பெருமாள் கோவிலுக்கு சற்று பக்கத்தில் "ஏரி காத்த ராமர் "கோவில் உள்ளது. மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த ராமர் கோவில்  உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்றது. அதேபோல் இங்கும் ஒரு ஏரி காத்த ராமர் கோயில் உள்ளது. ஏரியின் பெயர் "வருண புஷ்கரணி" ஆகும்.




பக்தவத்சல பெருமாள் கோவிலை விட மிகவும் பழமை வாய்ந்தது என கூறப்படுகிறது. மூலவர் ஸ்ரீ ராமர் எட்டடி உயரத்தில் நின்ற கோலத்தில் சீதாதேவி மற்றும் லக்ஷ்மணருடன் காட்சி அளிக்கிறார்.


இக்கோவிலில் ராமர் சன்னதிக்கு வெளிப்புறம் உள்ள அனுமான் மிகவும் விசேஷமானது. என்னவென்றால் ஆஞ்சநேயரின் இரண்டு தோள்களிலும் ராமரையும்,லக்ஷ்மணரையும் சுமந்தபடி இருக்கும் காட்சி வேறெங்கிலும் காண முடியாது.இது தவிர பெருமாள் சன்னதிக்கு எதிரேவும் ஆஞ்சநேயருக்கு தனியாக சன்னதி உள்ளது.


ராமர் கோவிலுக்கு பக்கத்திலே ஶ்ரீ லட்சுமி நரசிம்மர் சுவாமி கோயிலும் உள்ளது.அங்கு நரசிம்மர் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சியளிப்பது மிகவும் சிறப்புவாய்ந்தது. சுற்றுப்பிரகாரத்தில்  நவ நரசிம்மரின்(9-நரசிம்மரின்) சித்திரங்கள் வரையப்பட்டுள்ளது. அது மிகவும் சிறப்பாக உள்ளது. அமைதியாகவும், இயற்கைச் சூழல் நிறைந்த இடமாகவும்,பார்ப்பதற்கு ரம்யமாகவும் இருக்கிறது. இங்குள்ள கோயில்களுக்குச் சென்று ஒரு முறை பெருமாளை தரிசனம் செய்து விட்டு வாருங்கள் நீங்கள் நினைத்த காரியம் நிச்சயமாக வெற்றி பெறும்.


ஜெய் ராம், ஜெய் ராம், ஜெய ஜெய ராம்.


(எம் .எல்.பிரபா, சென்னை ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியை. தமிழ்நாடு நியூஸ் பேப்பர், பேப்பர் பாய், பன்முகம், மலர்வனம், விருட்சம், நான் போன்ற மின் இதழ்களில் சிறுகதைகள், கட்டுரைகள் போன்றவைகளும், தமிழ்நாடு நியூஸ் பேப்பரில் 'மாயக்கண்ணன் லீலை' என்ற தொடரும் எழுதியுள்ளார்)