சென்னையைச் சுற்றிப் பார்க்க 'சென்னை உலா': புதிய சுற்றுலாப் பேருந்து சேவை தொடக்கம்!
சென்னை: சென்னையை சுற்றிப் பார்க்க சென்னை உலா சுற்றுலா பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் இன்று தொடங்கி வைத்தார்.
சென்னைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களை எளிதாகவும், வசதியாகவும் சுற்றிப் பார்க்கும் வகையில் 'சென்னை உலா' என்ற புதிய ஒருநாள் சுற்றுலாப் பேருந்து சேவையைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இந்தப் பேருந்து சென்னை தீவுத் திடல், அரசு அருங்காட்சியகம் (எழும்பூர்), மெரினா கடற்கரை, விவேகானந்தர் இல்லம், கபாலீஸ்வரர் கோவில், புனித தோமையார் மலை மற்றும் வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களை இணைக்கிறது. இந்த சுற்றுலா பேருந்தில் செல்ல நாள் ஒன்றிற்கு ரூ.50 கட்டணமாக பெறப்படுகிறது. காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை இப்பேருந்து செயல்படும்.
குளிர்சாதன வசதி கொண்ட இந்தப் பேருந்துகளில் சுற்றுலா வழிகாட்டிகள் இருப்பார்கள். அவர்கள் ஒவ்வொரு இடத்தின் வரலாற்றுச் சிறப்புகளையும் பயணிகளுக்கு விளக்குவார்கள். சுற்றுலாப் பயணிகள் TTDC-யின் அதிகாரப்பூர்வ இணையதளம் அல்லது தீவுத் திடலில் உள்ள அலுவலகம் மூலம் தங்களது பயணத்தை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.