சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை: நாளையும் மழை தொடரும் என எச்சரிக்கை

Su.tha Arivalagan
Nov 23, 2026,04:25 PM IST

சென்னை:தமிழகத்தின் தலைநகரான சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் இன்று (நவம்பர் 23, 2026) பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து நகரின் முக்கியப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.   


குறிப்பாக, சென்னையின் மையப் பகுதிகளான சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, சென்ட்ரல், பாரிமுனை மற்றும் நுங்கம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிதமானது முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அப்பகுதிகளில் இதமான குளிர்ந்த சூழல் நிலவுகிறது. அதேபோல், நகரின் மற்ற முக்கியப் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி மற்றும் அசோக் நகர் ஆகிய இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.   தொடர்ந்து பெய்து வரும் இந்த மழையின் காரணமாகச் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. 




குறிப்பாக, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல் மற்றும் வடபழனி போன்ற முக்கியச் சந்திப்புகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அலுவலகம் முடிந்து வீடு திரும்புவோர் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மழையில் நனைந்தபடியும், குடைகளைப் பிடித்தபடியும் செல்லும் காட்சிகளைக் காண முடிகிறது. பகல் நேரத்திலேயே இருள் சூழ்ந்த வானிலை நிலவுவதால், இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடியே மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் அண்ணா சாலை, ஜி.எஸ்.டி சாலை மற்றும் பூந்தமல்லி நெடுஞ்சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 


தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க மாநகராட்சி ஊழியர்கள் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். போக்குவரத்தைச் சீர் செய்யும் பணியில் போக்குவரத்து காவல்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.கடந்த சில நாட்களாக நிலவி வந்த வெப்பம் தணிந்து, தற்போது பெய்து வரும் இந்த மழையால் சென்னைவாசிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், குடிநீர் ஆதாரங்களாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டமும் உயர வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். அடுத்த சில மணி நேரங்களுக்குச் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் மழை தொடர வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 


கார்த்திகை தீபத் திருநாளான நவம்பர் 24ம் தேதியான நாளையும் சென்னை, நீலகிரி, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. சென்னையில் நேற்று இரவு முதலேயே பல இடங்களில் மழை பெய்ய துவங்கி உள்ளதால், வானிலை மொத்தமாக மாறி உள்ளது.