அறுபடை வீடுகளுக்கு நிகரான.. சென்னிமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில்

Su.tha Arivalagan
Oct 13, 2026,12:14 PM IST
- ஈரோடு மாலதி

ஈரோடு: ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் அமைந்துள்ள அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், முருகப் பெருமானின் மிகவும் புகழ்பெற்ற பழமையான மலைக்கோவில்களில் ஒன்றாகும். இது முருகனின் அறுபடை வீடுகளுக்கு நிகரான சிறப்பைக் கொண்ட தலமாகக் கருதப்படுகிறது. இக்கோவில் சுமார் 3000 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்றுச் சிறப்புமிக்கதுமாகும்.

புராணங்களின்படி, வாயு பகவானுக்கும் ஆதிசேடனுக்கும் இடையே மேரு மலையைச் சுற்றி யார் பலசாலி என்ற போட்டி நிகழ்ந்தது. அப்போது வாயு தேவன் பலமாக காற்று வீசியதில் மேரு மலையின் சிகரம் முறிந்து பூந்துறை நாட்டில் விழுந்தது. அந்தச் சிகரப் பகுதியே சிரகிரி, புஷ்பகிரி மற்றும் சென்னிமலை என்று அழைக்கப்படலாயிற்று.

இன்னொரு புராணக் கதையும் உண்டு. சென்னிமலைக்கு அருகில் உள்ள கொடுமணல் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவருக்குச் சொந்தமான காராம்பசு தினமும் மேய்ச்சலுக்குச் சென்றுவிட்டு மாலையில் வீடு திரும்பும் போது மடியில் பால் இல்லாமலேயே திரும்பியது. மாட்டின் மீது சந்தேகமடைந்த உரிமையாளர் பசுவை இரகசியமாகப் பின்தொடர்ந்து சென்றார். அப்பசு காட்டின் நடுவே இருந்த ஒரு குறிப்பிட்ட புதரின் அருகில் சென்று, தானே நின்று தன் மடியில் உள்ள பாலை அந்தப் புதரின் மீது சொரிவதைக் கண்டார்.




அந்தப் புதரை விலக்கிப் பார்த்தபோது, அதற்குள் முருகப்பெருமான் சுயம்பு மூர்த்தியாக (தானாகத் தோன்றிய வடிவம்) காட்சியளித்தார். பசுமாடு பால் சொரிந்து இறைவனின் இருப்பிடத்தை வெளிப்படுத்திய இந்த இடமே பிற்காலத்தில் சென்னிமலை முருகன் கோவிலாக மாறியது என்று சொல்கிறார்கள்.

முருக பக்தரான பாலதேவராய சுவாமிகளால் புகழ்பெற்ற "கந்த சஷ்டி கவசம்" முதன்முதலில் சென்னிமலை முருகப்பெருமான் சன்னதியில்தான் அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதில் வரும் "சிரகிரி வேலவன்" என்ற வரி சென்னிமலை ஆண்டவனைக் குறிப்பதாகும்.



இக்கோவிலில் முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்படும் தயிர் எப்போதுமே புளிப்பதில்லை என்பது பக்தர்களால் நம்பப்படும் ஒரு பெரிய அதிசய நிகழ்வாகும்.

இத்தலத்தில் பதினெண் சித்தர்களில் ஒருவரான பிண்ணாக்கு சித்தர் (பின்நாக்கு சித்தர்) தவம் செய்து ஜீவ சமாதி அடைந்த குகை மற்றும் அரச மரம் அமைந்துள்ளது. 

கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1749 அடி உயரத்தில் உள்ள இக்கோவிலை அடைய 1,320 படிக்கட்டுகள் உள்ளன. அடிவாரத்தில் இருந்து மலை உச்சிக்கு பக்தர்கள் எளிதாகச் செல்லும் வகையில் செப்பனிடப்பட்ட வாகனப் பாதையும் உள்ளது.

செவ்வாய்க்கிழமைகள், கிருத்திகை மற்றும் சஷ்டி நாட்களில் சென்னிமலை முருகனை வழிபட்டால் பக்தர்களின் சகல வினைகளும் தீரும் என்பது ஐதீகம்.

(கட்டுரையாளர் மாலதி, நசியனூர், நெசவாளர் காலனி, சிந்தன்கோட்டை, எம்ஜிஆர் ரோடு, ஈரோடு)