செட்டிநாட்டு அடுப்படி.. தித்திக்கும் உக்காரை.. சூப்பர் இனிப்பு.. சுப்ரீம் சந்தோஷம்!

Su.tha Arivalagan
Mar 20, 2026,10:46 AM IST

- மணிமா


கலை என்றால் அது அழகிய படைப்பு ...... கலைஞனின் படைப்பு கவித்துவமானவை ... கருப்பொருள் நிரம்பி வழியும் பெட்டகம் ... ஆதிகாலம் தொட்டு இன்றைய நாள் வரை மகத்துவமான கலை சமையல் கலை ..


நாசி மணக்க மணக்க நா இனிக்க இனிக்க மனம் மகிழ்ந்து மகிழ படைக்கப்படும் பதார்த்தங்கள் கொண்டது.....சமையல்.


அதிலும் குறிப்பாக அனைவரும் அறிந்து பலராலும் பாராட்டு பெற்ற சமையல் செட்டிநாட்டு சமையல்


வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் பொருட்களை வைத்துக்கொண்டு அதனுடன் அன்பையும் சேர்த்தால் சுவை மிகுந்த செட்டிநாட்டு சமையல் தயார் .....


செட்டிநாடு அடுப்படி குறித்தும், அதன் சுவாரஸ்ய பதார்த்தங்கள் குறித்தும் உங்களுடன் கைகோர்த்துக் கொண்டு பகிரப் போவது ..... படைப்பாளர்.. மணிமா ..


இனிப்போடு ஆரம்பிக்கலாமா.. அந்த வகையில் இன்று பார்க்கப் போவது.. உக்காரை (இனிப்பு)


தேவையான பொருட்கள் ..




1..பாசிப்பருப்பு ஒரு கப்

2..பச்சரிசி மிக்ஸியில் ரவை பதத்தில் பொடியாக்கியது ஒரு கப் ....

3..வெல்லம் இடித்து பொடியாக்கி இரண்டு கப் நிறைய ...

4...நெய் ஒரு கப் நிறைய

5.முந்திரி ஒன்றிரண்டாக உடைத்து...இருபது.

6...ஏலக்காய் தூள் ஒரு ஸ்பூன் அளவு

7..ஒரு துளி உப்பு


செய்முறை


முதலில் வாணலியை அடுப்பில் வைத்து இரண்டு கப் அளவு தண்ணீர் விட்டு சூடு வந்த பின் பாசிப்பருப்பை கழுவி தண்ணீரில் சேர்க்கவும் அடுப்பு மிதமான தீயில் வைத்து குலைந்து விடாமல் எடுத்து இருக்கும் தண்ணீரை ஒட்ட வடித்து விட்டு தட்டில் பரப்பி விடவும்.


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து ஒரு ஸ்பூன் நெய் விட்டு மிதமான தீயில் பொடித்த அரிசியை கொட்டி லேசாக சூடு வரும் வரை சிவந்து விடாமல் வறுக்கவும்.


இதில் தண்ணீர் இரண்டு கப் அளவு விட்டு மிதமான தீயில் ஐந்து நிமிட நேரம் கிளறி விடவும்.


நன்கு வெந்தபின் தட்டில் இருக்கும் பாசிப்பருப்பை நன்கு பிசறி உதிர்த்து அதே வானலியில் சேர்க்கவும்.


பக்கத்து அடுப்பில் ஒரு அடி கனமான பாத்திரம் ஒன்றை வைத்து அரை ஸ்பூன் நெய் விட்டு ஒன்றிரண்டாக ஒடித்து வைத்த முந்திரியை அதில் போட்டு கருகி விடாமல் சிவக்க எடுத்து வைக்கவும்.


மீண்டும் அதே வானலியை அடுப்பில் வைத்து அரை கப் தண்ணீர் விட்டு வெல்லத்துருவலையும் ஏலத்தூள் உப்பு இவற்றையும் சேர்த்து வெல்லம் உருகியவுடன் அதனை அரிசி பருப்பு கலவையில் கொட்டி கிளறவும் அடுப்பு மிதமாக இருக்க வேண்டும்.


மீதி நெய்யையும் சிறிது சிறிதாக சேர்த்த கிளரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும். உக்காரை தயார். சூடாக சாப்பிடும் போது சுவை அதிகமாக இருக்கும். ரசித்து செய்து ருசித்துப் பாருங்கள். எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்

மீண்டும் ஒரு அடுத்த பதார்த்த செய்முறையுடன் உங்களை சந்திக்கிறேன்


மகிழ்வுடன் உங்கள் மணிமா.