Chettinadu Kitchen: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடி.. கருணைக்கிழங்கு மசியல்!
- மணிமா
செட்டிநாட்டு அடுப்படியின் அத்தனை ரெசிபிகளுக்கும் நல்ல வரவேற்பு தந்து மகிழ்விக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் ...........மணிமா......வின் அன்பு நிறை வணக்கங்கள்
வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் சமையல் பொருட்களைக் கொண்டு அன்பையும் சேர்த்தால் சுவையான செட்டிநாட்டு சமையல் ரெடி.
அந்த வரிசையில் இன்று அரை மணி நேரத்தில் அசத்தலான ருசியில் சத்தான உடலுக்கு மருந்தாய் உதவும் கருணைக்கிழங்கு ....இதை வைத்து மசியல் செய்வது எப்படி என்று பார்ப்போமா ....
தேவையான பொருட்கள்
கருணைக்கிழங்கு 6
பூண்டு பல் பத்து
பச்சை மிளகாய் ஆறு
புளி சிறிய நெல்லிக்காய் அளவு
கடலை எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் இரண்டு குழி கரண்டி அளவு
தேவையான அளவு உப்பு
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கருவேப்பிலை ஒரு கொத்து
அலங்கரிக்க சிறிது மல்லி தழை
தாளிக்க. அரை ஸ்பூன் கடுகு அரை ஸ்பூன் சோம்பு ....
வாங்க வாங்க அடுப்படிக்குள் போகலாமா
முதலில் கருணைக்கிழங்கை மண் போக கழுவி விட்டு குக்கருக்குள் சேர்க்கவும்.
அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு மிதமான தீயில் அடுப்பில் வைத்து வெயிட் போட்டு 20 நிமிடம் கழித்து இறக்கி வைத்து ஆற விடவும்.
கிழங்கின் தோலை உரித்து விட்டு கையால் மசித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
10 பல் பூண்டு தோல் உரித்து ஒன்றிரண்டாக தட்டி வைக்கவும்.
ஒரு குழி கரண்டி அளவு தண்ணீரில் மிகச் சிறிதளவு உள்ள புளியைக் கெட்டியாக கரைத்து வைக்கவும்.
அடுப்பில் கனமான வாணலியை வைத்து மிதமான தீயில் இரண்டு குழி கரண்டி எண்ணெய் விடவும்.
எண்ணெய் காய்ந்ததும் கடுகு சோம்பு போட்டு பொரிந்த உடன் கருவேப்பிலையையும் 10 பல் பூண்டு தட்டி வைத்ததையும் போட்டு அதனுடன் ஆறு பச்சை மிளகாயை வட்ட வட்டமாக கட் செய்து அதனுள் போட்டு இரண்டு முறை பிரட்டி விடவும்.
கருவேப்பிலையையும் கிள்ளி போட்ட பிறகு பிசைந்து வைத்துள்ள கிழங்கையும் சேர்த்து ஒரு இரண்டு நிமிடம் பிரட்டி பிரட்டி விடவும்.
ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்க்கவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும் கரைத்து வைத்துள்ள புளியை ஒரு கை அளவு தெளித்து விடவும். மிதமான தீயில் ஐந்து நிமிட நேரம் கிளறி விடவும். ஏற்கனவே வெந்த கிழங்கு அதனால் ஐந்து நிமிட நேரத்தில் எளிதாக ஒன்று சேர்ந்து வரும்.
ஒரு பவுலுக்கு மாற்றி மேலே மல்லி தழை தூவவும்.
சூடான சாதத்தில் நெய் விட்டு அதனுடன் கருணைக்கிழங்கு மசியல் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்.
சூப்பரான சுவையான கருணைக்கிழங்கு மசியல் ரெடி.
கருணைக்கிழங்கு உடல் சூட்டை தணிக்கும். மூலநோய் தீர்க்கும். சத்தானதும் கூட
ருசித்து சாப்பிட்டு ரசித்து மகிழுங்கள்.
மீண்டும் ஒரு சுவையான செட்டிநாட்டு ரெசிபியுடன் அடுத்த வாரம் உங்களை எல்லாம் மகிழ்வுடன் சந்திக்கிறேன் அதுவரை என்றென்றும் அன்புடன் உங்கள் ...மணிமா....!