Mango Thokku Tips: செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடியில் செமையான.. கிளிமூக்கு மாங்காய் தொக்கு!

Su.tha Arivalagan
May 05, 2026,05:14 PM IST

- மணிமா


செட்டிநாட்டு அடுப்படியின் சுவையான ரெசிபிகளுக்கு அன்போடு வரவேற்பு தந்து கொண்டிருக்கும் அத்தனை நல் உள்ளங்களுக்கும் உங்கள்  ....மணிமா  வின் வணக்கங்களும் நன்றிகளும் ...


சீசனில் நிறைய கிடைத்துக் கொண்டிருக்கும் கிளி மூக்கு மாங்காய் வைத்து மிக மிக எளிதாக தொக்கு வித்தியாசமாக செய்து அசத்தலாம். குறைந்த பொருட்கள் குறைந்த நேரம் அபார ருசி. வாருங்கள் அடுப்படிக்குள் செல்வோம்.


தேவையான பொருட்கள்


கிளி மூக்கு மாங்காய் பெரியது ...இரண்டு

நல்லெண்ணெய் ...பெரிய குழி கரண்டி அளவு

தனி மிளகாய் தூள் மூன்று ஸ்பூன்

தேவையான அளவு ..உப்பு

வெல்லம் ..50 கிராம்

கடுகு தாளிக்க ...ஒரு ஸ்பூன்


வறுத்து பொடிக்க


வெந்தயம் கால் ஸ்பூன்

கடுகு கால் ஸ்பூன்

பெருங்காயம் மிகச்சிறிய அளவு.


செய்முறை





மாங்காயை கழுவி துடைத்து தோல் சீவி வைக்கவும். (கை வலிக்க விரல் வலிக்க கேரட் துருவியில் எல்லாம் துருவிக் கொண்டு இருக்க வேண்டாம்). பஜ்ஜி செய்ய பயன்படுத்தும் உபகரணம் எடுத்துக்கொண்டு .. அடியில் பெரிய பிளேட்டை வைத்துக் கொண்டு ...நீளநீளமாக வாழைக்காய் சீவுவது போல பெரிது பெரிதாக ஒரு நிமிட நேரத்திற்குள் சீவி விடலாம் ..(பொடி பொடியாக அதை கட் செய்ய வேண்டியதில்லை)


ஒரு வாணலியை அல்லது தாளிக்கும் கரண்டியை அடுப்பில் வைத்து மிதமான தீயில் அரை ஸ்பூன் கடுகு சேர்க்கவும் கருகிவிடாமல் வெந்தயம் உடன் கட்டிப் பெருங்காயம் அல்லது பெருங்காயத்தூள் சேர்த்து சூடு வந்தவுடன் இறக்கி வைத்து ஆறியபின் மிக்ஸியில் தூள் செய்து வைத்துக் கொள்ளவும்.


பெரிய வாணலியை அடிகனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் குழி கரண்டி எண்ணெயை விடவும்.


எண்ணெய் காய்ந்த பின் ஒரு ஸ்பூன் கடுகு தூவி வெடித்த பின் மாங்காய் சீவி வைத்துள்ளவற்றை எண்ணெய் தெறித்து விடாமல் அதற்குள் போடவும். ஒரு ஐந்து நிமிட நேரம் பிரட்டி கொடுக்கவும். சிறிய சிறிய துகள்களாக வெந்துவிடும். பிறகு கொடுத்துள்ள மிளகாய் தூள் உப்பு இவற்றை சேர்க்கவும். ஒரு ஐந்து நிமிட நேரம் பிரட்டி கிளறி விடவும்.


ஓரங்களில் லேசாக எண்ணெய் பிரிந்து வரும் வெல்லம் கூட்டி சேர்த்து ஒரு முறை கிளறி விட்டு அடுப்பை அணைத்து விடவும். வறுத்து பொடி செய்த தூளை தூவி ஒரு முறை கிளறி விடவும்.


இறக்கி வைத்து ஒரு 2 மணி நேரம் நன்கு ஆற விடவும்


ஆறியபின் ஒரு ஈரம் இல்லாத பாட்டிலில் அல்லது கண்டெய்னரில் வைக்கவும் பிரசர்வேட்டிவ் கலக்காததால் பிரிட்ஜூக்குள் வைத்துக் கொள்ளலாம். தேவைப்படும்போது எடுத்து உபயோகிக்கலாம். ஆறு மாதம் ஒரு வருடம் கூட கெடாமல் இருக்கும், உபயோகிக்கும் போது தண்ணீர் படாத ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும்.


நாவில் நீர் ஊறும் மாங்காய் தொக்கு ரெடி (துருவி செய்யும் போது மசிந்து விடுவதால் வாயில் மாங்காய் துகள்கள் கடிபடாது. இது சிறிது வித்தியாசமாக இருக்கும்)




இன்னும் 50 கிராம் வெல்லம் சேர்த்து விட்டால் குழந்தைகள் சப்பாத்திக்குள் வைத்து சாப்பிடுவார்கள்.


அதிரடி சுவையில் கண்ணைக் கவரும் நாவில் நீர் ஊறும் மாங்காய் தொக்கு ரெடி. அன்பாய் செய்து ஆசையுடன் பரிமாறி உண்டு மகிழுங்கள்


அடுத்த அருமையான ரெசிபியுடன் உங்களையெல்லாம் விரைவில் மீண்டும் சந்திக்கிறேன். அதுவரை உங்களிடம் இருந்து அன்புடன் விடை பெறுவது என்றென்றும் உங்கள் ....மணிமா...