Chettinadu Recipe: செட்டிநாட்டு அடுப்படியில் அதிரடியான சிக்கன் லெக் பீஸ்.. (ஹோட்டல் ஸ்டைலில்)
- மணிமா
செட்டிநாட்டு அத்தனை ரெசிபிகளுக்கும் மகத்தான வரவேற்பு தந்து மகிழ்விக்கும் உள்ளங்களை இன்று ...நான் வெஜ் ...செய்து உங்களை ரசித்து ருசிக்க வைக்க வந்துள்ளேன் உங்கள் ......மணிமா ....வணக்கங்களுடன் ...
வீட்டில் அன்றாடம் உபயோகிக்கும் பொருட்களுடன் அன்பையும் சேர்த்து சமைப்போம். சுவையான செட்டிநாட்டு சமையல் ரெடி ... அந்த வரிசையில் இன்று சிக்கன் லெக் பீஸ் மிகவும் டேஸ்டியாக செய்து அசத்துவோமா வாருங்கள் வாருங்கள்
தேவையான பொருட்கள் ...
சிக்கன் லெக் பீஸ் ஆறு துண்டுகள்
பெரிய வெங்காயம் இரண்டு
தக்காளி 3
பச்சை மிளகாய் ஆறு
முந்திரிப் பருப்பு 3
கருவேப்பிலை ஒரு கொத்து
புதினா 15 இலைகள்
கொத்தமல்லி தழை ஒரு கைப்பிடி அளவு
இஞ்சி ஒரு சிறு துண்டு வெள்ளைப் பூண்டு பல் ஆறு
தயிர் ஒரு கப்
கடலை எண்ணெய் ஒரு குழி கரண்டி அளவு
பட்டை விரல் நீளம்
பிரியாணி இலை ஒன்று
தனி மிளகாய் தூள் நான்கு ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை பட்டை ஒரு விரல் நீளம்
தேவையான அளவு உப்பு
வறுத்து அரைக்க தேவையானவை
சோம்பு அரை ஸ்பூன்
மிளகு 20
ஏலக்காய் மூன்று
கிராம்பு மூன்று
அன்னாசி பூ சிறியது ஒன்று
செய்முறை
ஒரு வாணலியில் வறுக்க வேண்டியவைகளை மிதமான தீயில் எண்ணெய் விடாமல் கருகி விடாமல் சிவந்தவுடன் எடுத்து பொடித்து வைக்கவும்.
அடுத்து அரைப்பதற்கு பெரிய வெங்காயம் தக்காளி முந்திரிப்பருப்பு இஞ்சி பூண்டு இவற்றை அடுப்பில் ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நன்கு வதக்கி ஆற வைத்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
அடுத்து பச்சை மிளகாய் மல்லித்தழை கருவேப்பிலை புதினா இலைகளை பொடிப்பொடியாக அறிந்து வைத்துக் கொள்ளவும்.
முதலில் ஆறு லெக்பீஸ் களையும் மேல் தோலை நீக்கிவிட்டு கத்தியால் இரண்டு மூன்று இடங்களில் கீறி விட்டு சிறிது தயிர் மஞ்சள் தூள் சேர்த்து மூன்று முறை நான்கு முறை நன்கு கழுவி விடவும். அகன்ற பாத்திரத்தில் கழுவிய லெக் பீசுகளை எடுத்துக்கொண்டு அதில் சிறிதளவு மஞ்சள் தூள் தேவையான அளவு உப்பு மிளகாய்த்தூள் பிரட்டி கொடுப்பதற்கு சிறிதளவு தயிர் சேர்த்து நன்கு பிசறி அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை நன்கு ஊற விடவும்.
அடுப்பில் அகன்ற கடாயை வைத்து ஒரு குழி கரண்டி எண்ணெய் விட்டு சிறிது காய்ந்த பின் பட்டை பிரியாணி இலை போடவும், அடுத்து பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் மல்லித்தழை கருவேப்பிலை பொதினா இவற்றை போட்டு மிதமான தீயில் ஒரு இரண்டு நிமிடம் நன்கு வதக்கவும்.
ஊற வைத்துள்ள லெக் பீசுகளை அதனுடன் சேர்க்கவும். ஒரு மூன்று நிமிடம் பிரட்டி கொடுத்த பின் தக்காளி வெங்காயம் அரைத்த கலவையை அதனுள் ஊற்றவும். மிதமான தீயில் வைத்து இரண்டு நிமிடத்திற்கு ஒருமுறை கிளறி விட்டுக் கொண்டே இருக்கவும். எல்லாம் சேர்ந்து வர இருபது நிமிடம் ஆகும். உப்பு போதுமா வெந்து விட்டதா என்று பார்த்துக் கொள்ளவும். மசாலா முழுவதும் அதனுள் ஒட்ட வேண்டும். வறுத்து பொடித்தவைகளை தூவவும்.
ஐந்து நிமிடம் எல்லாம் ஒன்று சேர்ந்து மசாலா முழுவதும் ஒட்டியபின் எண்ணெய் மேலாக வரும். அப்போது இறக்கிவிடலாம். தேவை எனில் ஒரு ஸ்பூன் வெல்லம் துருவி சேர்த்து கிளறி இறக்கலாம்.
பரிமாறும் பாத்திரத்திற்கு மாற்றிய பின் மல்லித் தழை தூவி அலங்கரிக்கவும்.
எளிதாக செய்யலாம் ருசியோ அபாரம்.
செய்து பார்த்து ருசித்து சாப்பிட்டு மகிழ்வுடன் இருங்கள்.
மீண்டும் அடுத்த வாரம் ஒரு இனிப்பான ரெசிபியுடன் உங்களை எல்லாம் சந்திக்கிறேன்
அதுவரை உங்களிடம் இருந்து அன்பு கூறி விடை பெறுவது உங்கள் அன்பு மணிமா.