செட்டிநாட்டு கிச்சன்.. இன்றைய ருசியான ரெசிபி.. அசத்தலான மட்டன் கிரேவி!

Su.tha Arivalagan
Aug 20, 2026,04:34 PM IST

செட்டிநாட்டின் அனைத்து ரெசிபிக்களுக்கும் மகத்தான வரவேற்பு தந்து மகிழ்விக்கும் உள்ளங்களுக்கு முதற்கண் அன்பான வணக்கத்தை பகிர்ந்து கொள்வது உங்கள் .......மணிமா .....


பார்த்து பார்த்து சமைத்து சுவைத்து சாப்பிட தோன்றும் அசத்தலான ...செட்டிநாட்டின் மட்டன் கிரேவி ...

வாருங்கள் அடுப்படிக்குள் செல்வோம் எளிதில் தயார் செய்வோம்


தேவையான பொருட்கள்


மட்டன் ஆட்டுக்கறி ...அரை கிலோ

நல்லெண்ணெய் அல்லது கடலை எண்ணெய் ஒரு குழி கரண்டி

தேவையான உப்பு

ஒரு சிட்டிகை மஞ்சள் தூள்


வறுக்கத் தேவையானவை




சிவப்பு மிளகாய் வற்றல் பத்து

மிளகு ஒரு ஸ்பூன்

மல்லி (தனியா) இரண்டு ஸ்பூன்

சோம்பு அரை ஸ்பூன்

சீரகம் அரை ஸ்பூன்

ஏலக்காய் மூன்று

சிறிய அளவில் பட்டை

சிறிய அளவு பிரியாணி இலை

கிராம்பு இரண்டு


எண்ணெய் அரை ஸ்பூன் விட்டு வறுக்க வேண்டியவை


சிறிய வெங்காயம் உரித்தது 20

வெள்ளைப்பூடு பல் உரித்தது 10

தக்காளிப் பழம் ஒன்று

கருவேப்பிலை இதழ்கள் பத்து

மிகச் சிறிய அளவு துண்டு இஞ்சி


செய்முறை


முதலில் மட்டனை மஞ்சள் தூள் சேர்த்து மூன்று முறை நன்கு கழுவி பிழிந்து எடுத்து குக்கரில் சேர்க்கவும். 300 மில்லி கிராம் அளவு தண்ணீர் சேர்த்து தேவையான அளவு உப்பையும் மஞ்சள் தூளையும் சேர்த்து குக்கரில் வெயிட் போட்டு 15 நிமிடம் அல்லது 20 நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும்.


ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் விடாமல் மிதமான தீயில் வற்றல் மிளகாய் மிளகு மல்லி, சோம்பு, சீரகம், ஏலக்காய் கிராம்பு பட்டை இலை வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் சேர்க்கவும்.


அதே கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மிதமான தீயில் வெங்காயம் பூண்டு தக்காளி கருவேப்பிலை இஞ்சி இவற்றையும் வதக்கி ஆற வைத்து மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மட்டன் வேக வைத்த நீரை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.


ஒரு கடாயை அடுப்பில் வைத்து மீதமுள்ள குழி கரண்டி எண்ணெயை விட்டு அதற்குள் வெந்த மட்டனையும் அரைத்த விழுதையும் ஒன்றாக சேர்த்து கலந்து விடவும். ஒரு 15 நிமிட நேரம் அவ்வப்பொழுது பிரட்டி விடவும். மூடி வைத்து சமைக்க வேண்டாம். கிரேவியாக தயாராகிவிடும். ருசித்துப் பார்த்துவிட்டு தேவைப்பட்டால் உப்பு சேர்த்துக் கொள்ளலாம். ஏற்கனவே வேகும் போது உப்பு சேர்த்துள்ளது (அடிப்பிடித்து விடாமல் பார்த்துக் கொள்ளவும்).

செட்டிநாட்டு மட்டன் கிரேவி தயார்.




ருசியோ அபாரம், செய்வது எளிது. அன்போடு சமைத்து ஆசையாய் பரிமாறுங்கள். அளவாய் சாப்பிடுங்கள்.

எந்தவிதமான செயற்கை நிறங்களோ வயிற்றுக்கு உபாதை தரும் பொருட்களோ செட்டிநாட்டு உணவில் சேர்ப்பதில்லை.


அன்றாடம் உபயோகிக்கும் சமையல் பொருட்களைக் கொண்டு அன்பையும் சேர்த்து சமைத்தாலே அபார ருசியுடன் அசத்தலான ....மட்டன் கிரேவி ...தயார் தயார்


சமையலின் மணம் நாசியை தாக்கனும்

சமைத்து உண்டபின் ருசியை ரசிக்கனும்.


அடுத்த ஒரு அற்புதமான செட்டிநாட்டு ரெசிபியுடன் மீண்டும் உங்களை விரைவில் சந்திக்கின்றேன்


என்றென்றும் அன்புடன் உங்கள் .....மணிமா ....