Tuesday Special: செட்டிநாடு ரெசிப்பி.. பிஞ்சு சுண்டைக்காயில் பிரியமான பச்சடி.. செம்ம டேஸ்ட்டி!
- மணிமா
இன்றைய செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி சமையலில் மிக மிக ருசியான சுவையான சுண்டைக்காய் பச்சடி குறித்துப் பார்க்கப் போகிறோம்.
செட்டிநாட்டின் அனைத்து ரெசிபிகளுக்கும் மகத்தான வரவேற்பு தந்து மகிழ்விக்கும் இனிய நல் உள்ளங்களுக்கு இதயம் கனிந்த வணக்கம் சொல்வது என்றென்றும் உங்கள் .....மணிமா.
இன்று நாம் பார்க்கப்போவது சுவையான சுண்டைக்காய் பச்சடி. பெரும்பாலும் செட்டிநாட்டின் எல்லா வீடுகளிலும் தோட்டத்தில் சுண்டைக்காய் செடி இருக்கும். சுண்டைக்காய் பிஞ்சாக இருக்கும் போதே எடுத்துக் கொள்ளலாம். உழவர் சந்தைகளிலும் பழமுதிர் நிலையங்களிலும் கிடைக்கின்றது.
பெரிதாக இருக்கும் சுண்டைக்காய்கள் சூப் வைப்பதற்கும் துவையல் செய்வதற்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனை பருப்புடன் சேர்த்து மிக எளிதாக செய்யலாம். துளி கூட கசக்காமல் அருமையாக இருக்கும். அன்போடு சமைப்போம். வாருங்கள் அடுப்படிக்குள் செல்வோம்.
தேவையான பொருட்கள்
சுண்டைக்காய் ஒரு கப்
துவரம் பருப்பு அரை கப்
சிறிய வெங்காயம் உரித்தது 10
தக்காளி மிகச்சிறியது ஒன்று
பச்சை மிளகாய் இரண்டு
புளி- மிக மிக கொஞ்சமாக சிறிய நெல்லிக்காய் அளவு
சாம்பார் தூள் ஒரு ஸ்பூன்
மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை
உப்பு ஒரு சிட்டிகை
பெருங்காயத்தூள் கால் சிட்டிகை
கடுகு உளுந்தம் பருப்பு இரண்டும் சேர்த்து கால் ஸ்பூன்
எண்ணெய் இரண்டு ஸ்பூன்
கருவேப்பிலை 10 இலைகள்
மேலே அலங்கரிக்க கொத்தமல்லி தழை மிகச் சிறிதளவு
செய்முறை பார்ப்போமா?
துவரம் பருப்பை குக்கரில் சேர்த்து இரண்டு முறை கழுவி விட்டு இரண்டு கப் தண்ணீர் விட்டு ஐந்து நிமிடம் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து வைத்துக்கொண்டு சுண்டைக்காய்களை இரண்டு இரண்டாக நறுக்கி அதற்குள் தண்ணீருக்குள் போடவும்.
அடுப்பில் மண் சட்டியை வைத்து எண்ணெய் விட்டு (மண்சட்டி இல்லை என்றாலும் தாங்கள் பயன்படுத்தும் கடாய்களை அடுப்பில் வைத்துக் கொள்ளலாம்) எண்ணெய் காய்ந்ததும் கடுகு உளுந்தம் பருப்பு போட்டு பொறிந்ததும் கருவேப்பிலை சேர்க்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக அரிந்து போடவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும். ஒரு இரண்டு நிமிட நேரம் வெந்த பிறகு, ஒரு நிமிடம் பிரட்டி விட்டு தண்ணீருக்குள் இருக்கும் சுண்டைக்காய்களை தண்ணீரை வெளியே வடித்து விட்டு வெங்காயம் தக்காளியுடன் சுண்டைக்காயை சேர்க்கவும்.
இரண்டு முறை பிரட்டி விட்டு உப்பு புளி கெட்டியாக கரைத்தது, ஊற்றவும். சாம்பார் தூள் சேர்க்கவும். காய் வதக்கும் போதும் உப்பு சேர்க்கலாம். இல்லையெனில் இப்பொழுது சேர்க்கலாம். பருப்பு கெட்டியாக உள்ளதை உடன் சேர்க்கவும். பருப்பில் நிறைய தண்ணீர் இருந்தால் பருப்பு தண்ணீரை ரசத்திற்கு சாம்பாருக்கும் சேர்த்துக் கொள்ளலாம். ஒரு கிரேவி பதத்தில் வரும் (அடுப்பு ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை மிதமான தீயில் தான் இருக்க வேண்டும்) இறக்கி வைத்து கொத்தமல்லி தழை தூவுவோம்.
சுண்டைக்காயை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அன்போடு பரிமாறுங்கள், ரசித்து ருசித்து சாப்பிடுங்கள்.
மீண்டும் அடுத்த ஒரு சுவையான செட்டிநாட்டு ரெசிபியுடன் தங்களை எல்லாம் விரைவில் சந்திக்கிறேன் என்றென்றும் அன்புடன் உங்கள் .....மணிமா ....
(கவிதாயினி டாக்டர் எஸ் மணிமேகலை. செட்டிநாட்டை சேர்ந்த இவர் மதுரையில் பிறந்து வளர்ந்து இன்று ஈரோட்டில் சிறந்த அக்குபஞ்சர் மருத்துவராக உள்ளார். மருத்துவம் தவிர்த்து ஆன்மீக சொற்பொழிவு இசை கலை ஓவியத்திறமை மற்றும் பாடும் புலமை மிக்கவர். சிறந்த கவிஞர், எழுத்தாளர். நமது தென் தமிழ் இணையதளத்தில் மணிமா என்ற பெயரில் செட்டிநாட்டு ரெசிபி எழுதிக் கொண்டிருக்கிறார். தனது பத்தாவது வயதில் மறைந்த கல்வி அமைச்சர் நெடுஞ்செழியன் அவர்களிடம் மதுரையில் கவிதாயினி என்ற பெயர் சூட்டப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது)