Chettinadu Recipies: வாசக் கருவேப்பிலையே.. மணமணக்கும் கருவேப்பிலை குழம்பு!

Su.tha Arivalagan
Sep 11, 2026,10:55 AM IST

- மணிமா

செட்டிநாட்டு அடுப்படியின் அதிரடி சமையலில் இன்று மணக்க மணக்க கருவேப்பிலை குழம்பு..!

செட்டிநாட்டின் அனைத்து ரெசிபிகளுக்கும் மகத்தான வரவேற்பு தந்து மகிழ்விக்கும் உள்ளங்களுக்கு அன்புடன் வணக்கம் சொல்வது என்றென்றும் உங்கள்.. மணிமா

இன்று நாம் பார்க்கப் போவது மிக எளிதாக செய்யக்கூடிய கருவேப்பிலை குழம்பு. அபாரமாக இருக்கும் ருசியில். கருவேப்பிலையில் நிறைய இரும்பு சத்து உள்ளது நமக்கு தெரியும். நாம் தாளிப்பதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம். அதனை எடுத்து சாப்பிடுவதில்லை. மாறாக நிறைய கருவேப்பிலையை பச்சையாக அரைத்து சாப்பிடும் போது தான் அதன் பலன் முற்றிலுமாக கிடைக்கும். 15 நிமிடத்தில் செய்துவிடலாம் வாருங்கள் கிச்சனுக்குள் போவோம்


தேவையான பொருட்கள் ...

துளிரான (கொழுந்தான) கருவேப்பிலை இலைகள் உதிர்த்து எடுத்தால் ......2 கப். பெரிய மிக்ஸியில் எடுத்துக்கொண்டால் மிக்ஸியின் முக்கால் அளவுக்கு வரும்.

மிளகாய் வற்றல் பத்து
தேங்காய் விரல் நீளம் கீற்றாக...மூன்று துண்டுகள்
சிறிய சீரகம் ஒரு ஸ்பூன்
கசகசா ஒரு ஸ்பூன்
பொட்டுக்கடலை 3 ஸ்பூன்
புலி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு
தக்காளி பெரிதாக ஒன்று
சிறிய வெங்காயம் உரித்தது 25
வெள்ளைப்பூடு உரித்தது ....10 பல்
நல்லெண்ணெய். ஒன்றரை குழி கரண்டி அளவு
தேவையான உப்பு

செய்முறை


கருவேப்பிலை இலைகளை காம்பை விட்டு உருவி இரண்டு முறை கழுவி எடுத்து அப்படியே மிக்ஸிக்குள் பச்சையாக சேர்க்கவும்.

இதனுடன் சிவப்பு மிளகாய் வற்றல் பத்து தேங்காய் துண்டுகள் புளி.தக்காளி இவற்றையும் சேர்க்கவும்.

இப்போது அடுப்பில் ஒரு கடாயை வைத்து மிதமான தீயில் சூடு வந்த பிறகு பொட்டுக்கடலை கசகசா சீரகம் இவற்றை கருகி விடாமல் லேசாக சூடு வரும் வரை வறுத்து மிக்ஸியில் சேர்க்கவும்.

ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு அதே கடாயில் வெங்காயம் பூண்டு இவற்றை நன்கு வதக்கி விட்டு ஆறியபின் மிக்ஸிக்குள் சேர்க்கவும். உப்பையும் அதனுடன் சேர்க்கவும். தாராளமாக மூன்று கப் தண்ணீர் விட்டு நைசாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

பின்பு அதே கடாயில் மிதமான தீயில் மீதமுள்ள நல்லெண்ணையை விட்டு லேசான சூடு வந்தவுடன் அரைத்து வைத்துள்ள விழுதை அதற்குள் கொட்டியபின் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் ஒட்டி இருப்பதையும் சேர்த்துக் கொள்ளவும்.

பச்சையாக அரைத்து ஊற்றி இருப்பதால் தண்ணியாகவும் இருக்கும். பதத்தில் மிதமான தீயில் 10 நிமிடம் முதல் 15 நிமிடம் வரை கொதிக்க விடவும். மூடி போட்டு மூட வேண்டாம். நாம் விட்ட நல்லெண்ணெய் முழுவதும் ஓரத்தில் கசிந்து மேலே வரும் அடுப்பை அணைத்து விடவும்.

கறிவேப்பிலை குழம்பு நிறம் .....பச்சையில்
பார்த்ததும் சாப்பிடத் தோன்றும் .....இச்சையில்


ருசியில் மட்டன் குழம்பு போலவே இருக்கும். தயாராகிவிட்டது இந்த குழம்பு. இட்லி தோசை சப்பாத்தி சாதத்துடனும் சேர்த்து சாப்பிட அபாரமாக இருக்கும்.

சமைக்கும்போது அன்பையும் கூட சேருங்கள்.
ஆனந்தமாக சாப்பிடுங்கள்

வீட்டில் உள்ளோர்க்கு செய்து கொடுத்து அசத்துங்கள்
அவர்களது பாராட்டுகளை ஆனந்தமாகப் பிடியுங்கள்

மீண்டும் அடுத்த வாரம் மற்றும் ஒரு அருமையான ரெசிபியுடன் உங்களையெல்லாம் சந்திக்கும் வரை என்றென்றும் அன்புடன் உங்கள்

..........மணிமா.........