கள்ளக்குறிச்சியில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகை
சுமதி சிவக்குமார்
கள்ளக்குறிச்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று கள்ளக்குறிச்சி மாவட்டம் வருகிறார். இங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்து வைப்பதுடன் திமுக சார்பில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி சிலையையும் திறந்து வைக்க உள்ளார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கள்ளிக்குறிச்சியில் கள ஆய்வு மேற்கொள்ள வருகிறார். இதனை முன்னிட்டு காலை 10 மணியளவில் தியாகதுருகம் சாலையில் திமுக சார்பில் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் ஏ. வ. வேலு தலைமையில் முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
புதிய பஸ் நிலையம் திறப்பு விழா
அதனை தொடர்ந்து காலை 10.30 மணியளவில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார். அதனை பின்னர் கள்ளக்குறிச்சி ஏமப்பேர் ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் வெண்கல சிலையையும் திறந்து வைக்கிறார். அதன்பின்னர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மேடைக்கு வந்து சுமார் ஒரு லட்சம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்புரை ஆற்றுகிறார்.
புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு
தொடர்ந்து கள்ளக்குறிச்சி டோல்கேட் அருகில் அனைத்து வசதிகளுடன், அனைத்து துறைகளும் ஒரே இடத்தில் செயல்படும் வகையில் வீரசோழபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆட்சியர் அலுவகத்தை திறந்து வைக்கிறார். இந்த கட்டிடம் 8 தளங்களை கொண்டது. ரூபாய் 139 கோடியே 41 லட்ச மதிப்பீட்டில் 35.18 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது.
இதனால் கள்ளக்குறிச்சி முழுவதும் வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கே திமுக கொடிகளும் பேனர்களும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சி முடித்த பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை செல்கிறார்.
(சுமதி சிவக்குமார், தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)