மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Aug 21, 2025,02:22 PM IST

சென்னை:  மத்திய அரசின் கருப்பு சட்டத்தை உறுதியாக எதிர்ப்போம் என்று  முதல்வர் மு.க.ஸ்டாலின் ரகுமான் கான் நூல்கள் வெளியீட்ட விழாவில் தெரிவித்துள்ளார்.


சென்னை அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் இன்று நடைபெற்ற கழக நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் அ. ரகுமான் கான் அவர்கள் எழுதிய "நியாயங்களின் பயணம்", "மெளனமாய் உறங்கும் பனித்துளிகள்", "உலகமறியா தாஜ்மஹால்கள்", "பூ... பூக்கும் இலையுதிர் காலம்", "வானம் பார்க்காத நட்சத்திரங்கள்", ஆகிய 5 நூல்கள் மற்றும் "இடி முழக்கம்" அ. ரகுமான் கான் சட்டமன்றப் பேருரைகள், ஆகிய நூல்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


அதன்பின்னர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தந்தைக்குப் புகழ் சேர்க்கக்கூடிய தனயனாக, நம்முடைய அருமை அண்ணன் ரகுமான்கான் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவை, அவருடைய பெருமைகளைப் போற்றக்கூடிய பெருவிழாவாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய அருமைத் தம்பி டாக்டர் சுபேர்கான் அவர்களுக்கு முதலில் என்னுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.




நம்முடைய ரகுமான்கான் பேச்சுக்கும், எழுத்துக்கும் ரசிகன் நான். அவர் பேசுகின்ற கூட்டங்கள் என்றால், நான் விரும்பி பங்கேற்பதுண்டு. என்னைப் பொறுத்த வரைக்கும், அவர் ஒரு ஸ்டார் பேச்சாளர். சட்டமன்றப் பேச்சுக்கு ஒரு எடுத்துக்காட்டாக எவ்வளவோ விஷயங்களைச் சொல்லமுடியும். அவர் பேச்சு, சட்டமன்றத்தில் இடி முழக்கமாவும், தமிழ்நாடு முழுவதும் வெடிமுழக்கமாகவும் எதிரொலிக்கும்.


மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் எத்தனையோ முறை அண்ணன் ரகுமான்கான் அவர்களைத் தன்னுடைய கட்சிக்கு வரச்சொல்லி அழைத்தார். ஆனால், சிறிய சஞ்சலம் கூட இல்லாமல், கொள்கை உறுதியுடன் கழகத்தில் இருந்தவர் அண்ணன் ரகுமான்கான் அவர்கள். ஒருமுறை அல்ல, இரண்டு முறை அவர் வீட்டில் வெடிகுண்டு வீசப்பட்டது. அதற்கெல்லாம் பயப்படவில்லை.   


நேற்று நாடாளுமன்றத்தில், நாட்டை சர்வாதிகரத்தை நோக்கி நகர்த்த புலனாய்வு அமைப்புகளை வைத்து தங்களுக்கு எதிரானவர்களை பதவி நீக்கம் செய்ய, ஒரு கருப்பு சட்டத்தை கொண்டு வந்திருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அவர்கள். இதற்கு முன்பு, குடியுரிமை திருத்தச் சட்டம், வக்ஃபு திருத்தச் சட்டம் என சிறுபான்மையின மக்களுக்கு எதிராக பல்வேறு சட்டங்களை எல்லாம் கொண்டு வந்தார்கள். அப்போதெல்லாம் இந்த சட்டங்களை திராவிட முன்னேற்றக் கழகம் எப்படி கடுமையாக எதிர்ததோ, அதேபோல இந்த கருப்பு சட்டத்தை எதிர்ப்போம். இதையெல்லாம் அவர்கள் ஏன் செய்கிறார்கள். மக்கள் பிரச்சனையை திசை திருப்ப செய்கிறார்கள். மக்களுடைய கவனத்தை மட்டும் திருப்புவது மட்டுமல்ல, நாட்டையே ஜனநாயக பாதையில் இருந்து திசை திருப்புவதற்காக அதை செய்கிறார்கள். 


என்னைப் பொறுத்தவரைக்கும், "கொள்கையை விதைத்து, உழைப்பை உரமாக்கி, வெற்றியை விளைவிக்க வேண்டும்!" இயக்கத்தில் எத்தனைக் கோடி பேரைச் சேர்த்தாலும், அவர்கள் கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக வளர்த்தெடுக்க வேண்டும். அதற்கு, தந்தை பெரியார், புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், இனமானப் பேராசிரியர் போன்றவர்களுடைய எழுத்துக்களையும், பேச்சுக்களையும் கொண்டு செல்வது போல, அண்ணன் ரகுமான்கான் அவர்களுடைய திராவிட இயக்கத் தீரர்களுடைய சிந்தனைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.