நிதி ஆயோக் கூட்டம்: மே 24 முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்லவுள்ளதாக தகவல்!

Meenakshi
May 16, 2025,05:46 PM IST

சென்னை: நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே 24ம் தேதி டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.


கோடை காலத்தில் ஊட்டி தாவரவியல் பூங்காவில் ஆண்டு தோறும் மலர் கண்காட்சி நடைபெற்று வருவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டிற்கான 127வது மலர் கண்காட்சி நேற்று தொடங்கியது. கடந்த 12ம் தேதி 5 நாட்கள் சுற்றுப்பயணமாக ஊட்டி சென்ற முதல்வர் இந்த மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். 


அதனைத் தொடர்ந்து ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ரூ.24, 60,000 செலவில் பெரணி இல்லம்  புதுப்பிக்கப்பட்டிருந்தது. அதனையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அதுமட்டுமின்றி பல்வேறு கலை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்ட பின்னர் 5 நாள் சுற்றுப்பயணம் முடிவுற்று இன்று சென்னை புறப்படுகிறார் முதல்வர்.




இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மாதம் 24ம் தேதி டெல்லி புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மே 24ம்  தேதி டெல்லியில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெற உள்ளநிலையில், அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இந்த அழைப்பின் படி நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.