கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்வார் ஆருயிர் அண்ணன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

Meenakshi
Jul 19, 2025,08:43 PM IST

சென்னை: கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதில் என்றும் வாழ்வார் ஆருயிர் அண்ணன் மு.க.முத்து என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதலவர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்து உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். அவருக்கு வயது 77 ஆகும். மு.க.முத்துவின் உடல் சென்னை ஈச்சம்பாக்கம் இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மு.க.முத்துவிற்கு முதல்வர் மற்றும் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிடோர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 


முதல்வர் மு.க. ஸ்டாலின்




முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், கலைஞர் குடும்பத்தின் மூத்த பிள்ளை, என்னுயிர் அண்ணன் மு.க.முத்து மறைவுற்றார் என்ற செய்தி இன்று காலையில் என்னை இடியெனத் தாக்கியது. தாய் - தந்தையர்க்கு இணையாக என் மீது பாசம் காட்டிய அன்பு அண்ணனை இழந்துவிட்டேன் என்ற துயரம் என்னை வதைக்கிறது.


தந்தை முத்துவேலர் நினைவாக அண்ணனுக்கு மு.க.முத்து என்று பெயர் சூட்டினார் கலைஞர். கலைஞரைப் போலவே இளமைக் காலம் முதல் நாடகங்களின் மூலமாகத் திராவிட இயக்கத்துக்கு தொண்டாற்றத் தொடங்கியவர் அண்ணன் முத்து. நடிப்பிலும், வசன உச்சரிப்பிலும், உடல் மொழியிலும் தனக்கெனத் தனிப்பாணியை வைத்திருந்தார். அத்தகைய ஆற்றல், ஆர்வம் காரணமாக திரைத்துறையில் 1970-ஆம் ஆண்டில் நுழைந்தார். அறிமுகமான முதல் திரைப்படத்திலேயே இரட்டை வேடத்தில் நடித்தார்.


பிள்ளையோ பிள்ளை, பூக்காரி, சமையல்காரன், அணையா விளக்கு ஆகிய படங்களின் மூலமாகத் தமிழ்நாட்டு ரசிகர் மனதில் நிரந்தரமாகக் குடியேறினார் அண்ணன் மு.க.முத்து. பல நடிகர்களுக்கு வாய்க்காத சிறப்பு அவருக்கு இருந்தது. தனது சொந்தக் குரலில் பாடல்களை இனிமையாகப் பாடும் திறனைப் பெற்றிருந்தார். 'நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ என்ற பாடலும், 'சொந்தக்காரங்க எனக்கு ரொம்ப பேருங்க' என்ற பாடலும் பலராலும் இன்றும் மறக்க முடியாத பாடல் ஆகும்.


என் மீது எப்போதும் பாசத்துடன் இருந்து, எனது வளர்ச்சியைத் தன் வளர்ச்சியாகக் கருதி, எப்போதும் என்னை ஊக்கப்படுத்தி வந்தவர் அவர். எப்போது அவரைப் பார்க்கச் சென்றாலும், பாசத்துடன் பழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். வயது மூப்பின் காரணமாக அவர் மறைவுற்றாலும் அன்பால் எங்கள் மனதிலும், கலையாலும் பாடல்களாலும் மக்கள் மனதிலும் என்றும் வாழ்வார் அண்ணன் மு.க.முத்து. என் ஆருயிர் அண்ணனுக்கு அன்புணர்வுடன் எனது அஞ்சலியை நான் செலுத்துகிறேன்." என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ


மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட பதில், முத்தமிழறிஞர் கருணாநிதி – தமிழிசைப் பாடகர் சிதம்பரம் ஜெயராமன் சகோதரி பத்மாவதி ஆகியோரின் அன்பு மகனான மு.க.முத்து 77 வயதில் உடல்நலக் குறைவால் இன்று மரணம் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்தம் அடைந்தேன்.


தான் பிறந்தபோதே அன்புத் தாயாரை பறிகொடுத்த துயரத்திற்கு உரியவர் மு.க.முத்து. கலைத்துறையில் நாட்டம் கொண்ட அவர் தொடக்க காலத்தில் தி.மு.கழக மேடைகளில் கழக கொள்கை விளக்கப் பாடல்களை பாடியும், தேர்தல் களத்தில் சிறப்பாக பிரச்சாரம் செய்தும் தி.மு.கழக வளர்ச்சிக்கு பெரிதும் துணை நின்றார். சிறந்த திரைப்பட நடிகராகவும், பாடகராகவும் கலைத்துறையில் முத்திரை பதித்து வந்தார்.


இவரது மறைவால் துயரம் அடைந்திருக்கக் கூடிய தி.மு.கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.முத்துவின் துணைவியார் சிவகாமசுந்தரி, மகன் அறிவுநிதி, மகள் தேன்மொழி ஆகியோருக்கும், மற்றும் உள்ள குடும்ப உறவுகளுக்கும் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை


தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் முன்னாள் தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் மூத்த மகனும், மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சகோதரருமான மு.க.முத்து அவர்களின் மறைவுச் செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.


மு.க.முத்து அவர்கள் தமிழ்நாட்டின் கலையுலகிலும் அரசியல் வரலாற்றிலும் தனக்கென தனி இடம் பதித்தவர். தந்தையின் அரசியல் பாரம்பரியத்தையும், சமூக அக்கறையையும் தொடர்ந்து அவர் எடுத்துச் சென்றதோடு, திரைப்படங்களின் மூலமாகவும், பொதுவாழ்வின் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். தந்தையின் தமிழ்ப்பற்றையும், அரசியல் உணர்வையும் தனது வாழ்வின் பல கட்டங்களிலும் வெளிப்படுத்தியவர் திரு மு.க.முத்து அவர்கள். பல சிறந்த படங்களில் நடித்து புகழ்பெற்றவர். தனித்துவமான குரலில் சிறந்த பாடல்களை பாடியுள்ளார்.


அவரது மறைவு அவரது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், குடும்பத்தினர், உறவினர்கள், தி,மு.க. உடன்பிறப்புகள், திரையுலக நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் ஈடு செய்யமுடியாத பேரிழப்பாகும். மிகுந்த சோகமான இந்நேரத்தில் முதலமைச்சர் அவர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும், திரையுலக நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ்


முத்தமிழ் அறிஞர் கலைஞரின் மூத்த புதல்வரும்,  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரரும்  திரைப்பட  நடிகருமான  மு.க. முத்து அவர்கள் சென்னையில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து  வருத்தம் அடைந்தேன்.


அவரை இழந்து வாடும்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள், திமுகவினர் உள்ளிட்ட அனைவருக்கும்   எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபங்களையும்  தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.


பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் 


முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் மூத்த மகனும், மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்களின் மூத்த சகோதரருமான மு.க. முத்து அவர்களின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.


அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். திரு. மு.க. முத்து அவர்களின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.


ஓம் சாந்தி! என்று தெரிவித்துள்ளார்.