உறவுமுறைகளும், இன்றைய குழந்தைகளும்!
- பி.சுப்புலட்சுமி பிரமநாயகம்
தமிழ்க் கலாச்சாரத்தின் அடையாளங்களில் உறவுமுறை சொல்லி அழைப்பது மிக முக்கியமான ஒன்றாகும். அத்தை, மாமா, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா போன்ற சொற்கள் வெறும் அழைப்புகள் அல்ல; அவை பாசம், மரியாதை, பண்பு ஆகியவற்றை ஒரே நேரத்தில் வெளிப்படுத்தும் சொற்களாகும்.
இன்றைய காலத்தில் வளர்ந்து வரும் குழந்தைகள் இந்த உறவுமுறைகளில் இருந்து மெதுவாக விலகி வருகிறார்கள் என்பது கவலைக்குரிய விசயமாகவேஉள்ளது.
அப்பா–அம்மா, குழந்தை என்ற வட்டத்திற்குள் இன்றைய குழந்தைகளின் உலகம் சுருங்கி விடுகிறது. பல குழந்தைகள் உறவுகளின் பெயர்களையே சரியாக அறியாமல் வளர்கிறார்கள். குழந்தைகளின் கூச்ச சுபாவம் உறவுமுறைகள் சொல்லி அழைப்பதை கட்டிப்போட்டு விடுகிறது.
உறவினர்கள் வீட்டிற்கு வந்தால் பேசுவதற்குப் பதிலாக, “ஹாய்”, “ஹலோ” என்று மட்டும் சொல்லி விட்டு மீண்டும் திரைக்குத் திரும்பும் நிலை உருவாகி உள்ளது. உறவுமுறை சொல்லி அழைப்பதன் பின்னுள்ள பாசமும், பாதுகாப்பும், மரியாதையும் குழந்தைகளிடம் குறைந்து வருகிறது. “மாமாவுக்கு கால் பண்ணு”, “பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கு” போன்ற சிறு வழிகாட்டுதல்கள் தான் குழந்தைகளின் மனதில் ஆழமாகப் பதியும்.
“மாமா (அம்மாவின் சகோதரர் ) நமக்கு உதவுவார், பாதுகாப்புத் தருவார்” என்று சொல்லும் போது, உறவு வெறும் பெயராக இல்லாமல் உணர்வாக மாறும். "அத்தை (அப்பாவின் சகோதரி) அணைத்து வளர்ப்பவள், ஆகச்சிறந்தவள் என்பவை குழந்தைகளை உணர்வூட்டம் செய்பவை.
உறவுமுறைகள் குழந்தைகளுக்கு சமூக உணர்வை வளர்த்து, தனிமனித சிந்தனைக்குப் பதிலாக சேர்ந்து வாழும் பண்பை உருவாக்குகின்றன. மரியாதை, பொறுமை, பாசம், பகிர்வு போன்ற மனிதநேய மதிப்புகள் உறவுகளின் வழியே குழந்தைகளிடம் இயல்பாக உருவாகின்றன.
ஃபோன் எடுக்கும் தருணமே மரியாதையின் ஆரம்பம்:
பேசுவது யாரென்று தெரிந்தும் வெறும் ஹலோவில் ஆரம்பிப்பதை தவிர்த்தல் பழக்கப்படுத்துதல் வேண்டும். உறவுமுறைகளைச் சொல்லிப் பேசும் பழக்கம், குழந்தைகளின் மொழியிலும் மனதிலும் நல்ல பண்புகளை நட்டுவிடும்.
முடிவாக, இன்றைய குழந்தைகளுக்கும் உறவுமுறைகளுக்கும் இடையே உருவாகி வரும் இடைவெளியைக் குறைப்பது நம்முடைய கைகளில்தான் உள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சியோடு சேர்த்து, பாரம்பரிய மதிப்புகளையும் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்தால்தான் எதிர்கால சமூகம் மனிதநேயத்தோடும் , பண்பாட்டோடும் வளர்ந்து நிற்கும்.
குழந்தைகளை கட்டாயப்படுத்தாமல், இயல்பாக பழக்கப்படுத்துதல் வேண்டும். பணிவும், மரியாதையும் சேர்ந்த கல்வி மட்டுமே குழந்தைகளை குன்றின் மேலிட்ட விளக்காக்கி வளப்படுத்தும்.
அன்பும், மரியாதையும் வெளிப்புறத் திணிப்பாக அல்லாமல் குழந்தைகளின் உள்ளிருந்து ஊற்றெடுக்கும் உன்னத உணர்வாக்குவது பெற்றோர் கடமையே.
உறவுமுறைகள் சொல்லி அழைப்பது வெறும் மொழிப் பயிற்சி அல்ல, ஒரு உறவைக் கவனிப்பதும், மதிப்பதும், கலாச்சாரத்தைப் பாதுகாப்பதும் ஆகும்.
உறவுமுறை சொல்லி அழைப்பது ஒரு சிறு பழக்கமாகத் தோன்றினாலும் அதுவே நமது தமிழ்க் கலாச்சாரத்தின் அடித்தளம் என்பதை எண்ணிப் பார்ப்போம். ஏட்டுச் சுரைக்காயோடு நிற்காமல் வீட்டுச்சுரைக்காயையும் அறியச் செய்வோம். நாளைய பெற்றோர்களை நலமாக்க முயல்வோம்.
" பண்புடையார் பட்டுண்டு உலகம்"---
வள்ளுவம் வருங்காலத்திலும் வாழட்டும்! .
(கட்டுரை ஆசிரியர் குறித்து: பி.சுப்புலட்சுமி பிரமநாயகம், MCA,MA,B.Ed. பள்ளி ஆசிரியை, சென்னை)