புதுசு புதுசா யோசிக்கிறாங்களே...சீனாவில் உயிருடன் இருப்பதை அப்டேட் செய்ய புதிய "ஆப்"
பீஜிங் : நவீன உலகில் மனிதர்களின் வாழ்க்கை முறை வேகமான மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனா போன்ற நாடுகளில் தனிமையில் வசிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், தனிமையில் இருப்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் “Are You Dead?” (நீங்கள் உயிருடன் இருக்கிறீர்களா?) என்ற புதிய செயலி சீன மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தச் செயலியின் செயல்பாடு மிகவும் எளிமையானது, ஆனால் மிக முக்கியமானது. இதைப் பயன்படுத்தும் பயனர்கள் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை தங்களது மொபைல் மூலம் செயலியில் லாக்-இன் (Login) செய்ய வேண்டும். இதன் மூலம் தாங்கள் நலமாக இருப்பதை அவர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்.
பயனர் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் (48 மணிநேரம்) லாக்-இன் செய்யத் தவறினால், அந்தச் செயலி தானாகவே இயங்கத் தொடங்கும். பயனரிடமிருந்து எந்தப் பதிலும் வராத பட்சத்தில், அவர்கள் ஏற்கனவே பதிவு செய்து வைத்திருக்கும் அவசர காலத் தொடர்பு எண்களுக்கு (Emergency Contacts) தானாகவே எச்சரிக்கை செய்தி அனுப்பப்படும்.
சீனாவில் முதியவர்கள் மட்டுமின்றி, இளைய தலைமுறையினரும் வேலை மற்றும் தனிப்பட்ட காரணங்களால் நகரங்களில் தனித்து வசிக்கும் சூழல் உள்ளது.
சீனாவில் "வெற்று கூடு" (Empty Nest) குடும்பங்கள் அதிகரித்து வருகின்றன. தனிமையில் இருப்பவர்கள் திடீர் உடல்நலக் குறைவு அல்லது விபத்துக்களால் உயிரிழக்கும் போது, அது பல நாட்களுக்குப் பிறகே வெளியுலகிற்குத் தெரிய வரும் சோகமான நிகழ்வுகள் அங்கு அதிகரித்து வருகின்றன. இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்க்கவும், உரிய நேரத்தில் மருத்துவ உதவியோ அல்லது மீட்பு நடவடிக்கையோ கிடைப்பதை உறுதி செய்யவும் இந்தத் தொழில்நுட்பம் ஒரு பாலமாக அமைகிறது.
தொழில்நுட்பம் மனிதர்களைத் தனிமைப்படுத்துவதாக ஒருபுறம் விமர்சனங்கள் இருந்தாலும், இத்தகைய செயலிகள் அதே தொழில்நுட்பத்தை உயிர் காக்கும் கருவியாக மாற்றுகின்றன. சீன சமூக வலைதளங்களில் இது குறித்து விவாதிக்கும் பயனர்கள், "தனிமையில் வசிப்பவர்களுக்கு இது ஒரு மன அமைதியைத் தருகிறது" என்று கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், இது போன்ற செயலிகள் ஒரு தற்காலிகத் தீர்வே என்றும், மனிதர்களுக்கு இடையிலான நேரடி சமூகத் தொடர்புகளும், அக்கறையுமே இத்தகைய சிக்கல்களுக்கு நிரந்தரத் தீர்வாகும் என்றும் சமூக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
அதே போல் சீனாவில், தனிமை காரணமாக மனஅழுத்தம், விரக்தியில் இருப்பவர்கள் புலம்புவதை கேட்கும் பார்ட் டைம் வேலைகள் அதிகரித்து வருகின்றன. நீங்கள் ஃபிரியாக இருக்கும் நேரத்தில் யாராவது ஒருவரின் புலம்பலை கேட்டு, அவர்களுடன் குறிப்பிட்ட நேரம் உரையாடினால், அதற்கு உங்களுக்கு சம்பளம் வழங்கப்படும். இந்த வேலை தற்போது சீனாவில் மிகவும் பிரபலமாகி வருகிறது.