காதலிப்பதாக இருந்தால்.. இதயம் முரளி மாதிரி இருக்காதீங்க.. சீனத்து லியூ போல போட்டு உடைச்சிருங்க!

Su.tha Arivalagan
Aug 27, 2025,10:37 AM IST

பெய்ஜிங்: சீனாவில் நர்சரி பள்ளியில் டீச்சராக பணியாற்றி வரும் 30 வயது அமெரிக்கப் பெண்ணுக்கு நூடூல்ஸ் ஆர்டர் கொடுக்க வந்த புட் டெலிவரி ஊழியர் அப்படியே அவர் மீது காதல் கொண்டார். அத்தோடு நில்லாமல் பளிச்சென அவரிடம் லவ் யூ சொல்லி அவரை வெட்கப்பட வைத்து விட்டார். இப்போது இருவரும் காதலர்களாகி விட்டனர்.


டீச்சரிடம் லவ்வைச் சொன்ன அந்த வாலிபரின் பெயர் லியூ. இவருக்கு வயது 27தான் ஆகிறது. அதாவது டீச்சர் ஹன்னா ஹாரிஸை விட 3 வயது சின்னப் பையன்தான். ஆனாலும் காதலுக்கு வயதாவது ஒன்றாவது இல்லையா.. அந்த அடிப்படையில் ஹன்னா ஹாரிஸைப் பார்த்துமே காதலில் விழுந்து விட்டாராம் லியூ. அத்தோடு சற்றும் தயங்காமல் தனது காதலையும் அவரிடம் தெரிவித்துள்ளார்.


அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் நர்சரி பள்ளி ஆசிரியையான ஹன்னா ஹாரிஸ். ஷென்யாங் நகரில் ஒரு மழலையர் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் ஹாரிஸ், நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். அதைக் கொடுக்க வந்துள்ளார் லியூ. நூடுல்ஸை லியு டெலிவரி செய்ய வந்தபோது இருவரும் லிஃப்டில் சந்தித்துக்கொண்டனர். அப்போதே அவர் மீது காதலில் விழுந்துள்ளார் லியூ.




உடனே சற்றும் யோசிக்காமல், ஹன்னாவிடம் காதலைக் கூறி விட்டார். "எனக்கு அதிகமாக ஆங்கிலம் தெரியாது. அதனால், 'ஹலோ, ஐ லவ் யூ' என்று மட்டும் சொன்னேன். அதைக் கேட்டு அவர் சிரித்தார்," என்று வெட்கத்துடன் கூறினார் லியூ. இந்த சந்திப்புக்குப் பிறகு, இருவரும் பேச ஆரம்பித்தனர். லியுவுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுப்பதாக ஹன்னாவும், அவருக்கு சீன மொழி கற்றுக்கொடுப்பதாக லியூவும் பேசிக் கொண்டு அதன்படியே செய்து கூடவே காதலையும் வலுவாக்க ஆரம்பித்துள்ளனர்.


லியு தனது பூனைகளின் புகைப்படங்களையும், சமைக்கும் மற்றும் ரோலர்பிளேடிங் செய்யும் வீடியோக்களையும் ஹாரிஸுடன் பகிர்ந்துகொண்டார். விலங்குகள், உணவு மற்றும் விளையாட்டு ஆகியவற்றின் மீது இருவருக்கும் இருந்த பொதுவான ஆர்வம் விரைவில் அவர்களுக்குள் நெருக்கத்தை உருவாக்கியது.


அவர்களின் உறவு வளர்ந்த நிலையில், ஹாரிஸ் லியுவுடன் சேர்ந்து உணவு டெலிவரிக்குச் செல்லத் தொடங்கினார். மேலும், வார இறுதி நாட்களில் இருவரும் ஷென்யாங் நகரத்திற்கு வெளியே உள்ள கிராமங்களைச் சுற்றி வந்துள்ளனர். இந்த நிலையில்தான், கடந்த ஜனவரி மாதம், லியு ஒரு சுரங்கப்பாதை நிலையத்தில் வைர மோதிரத்துடன் ஹாரிஸிடம் தனது காதலைத் தெரிவித்தார். நாங்கள் ஒரு குறுகிய காலமே பழகியிருந்தாலும், இவள்தான் எனது வாழ்க்கை துணை என்று உணர்ந்தேன் என்றார் லியூ.


இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இருவரும் லியுவின் சொந்த ஊரில் திருமணம் செய்துகொண்டனர். ஹாரிஸின் பெற்றோரும் அமெரிக்காவிலிருந்து வீடியோ மூலம் தங்கள் ஆசீர்வாதங்களை அனுப்பி வைத்தனர். லியு ஒரு சாதாரண பின்னணியைச் சேர்ந்தவர். அவருக்கு சொந்தமாக வீடு அல்லது கார் எதுவும் இல்லை. ஆனால், ஹாரிஸ் அவற்றைப் பொருட்படுத்தவில்லை என்றும், அன்பை செல்வத்தால் அளவிட முடியாது என்று நம்புவதாகவும் லியு கூறினார். "நாங்கள் ஒருவருக்கொருவர் துணையாக இருக்கப் பிறந்தவர்கள்," என்றும் லியு கூறுகிறார்.


இருவரும் இன்னும் சரளமாக பேசிக் கொள்ள முடியவில்லை. காரணம் மொழிப் பிரச்சினை. இதனால் ஒரு மொழிபெயர்ப்பு ஆப்பை துணைக்கு வைத்துக் கொண்டுதான் பேசிக் கொள்கிறார்களாம். கூடவே ஒருவர் மற்றவரின் மொழியை வேகமாக கற்கவும் ஆர்வம் காட்டி வருகிறார்களாம். 


சூப்பர்ல.. காதலிப்பதாக இருந்தால் இதயம் பட முரளி போல இருக்கக் கூடாது.. சீனத்து லியூ போல போட்டு பொளேர் என உடைத்து விடுங்கள்.. அதுதான் உங்களுக்கும் நல்லது.. அந்த காதலுக்கும் நல்லது.