இப்படியும் ஒரு விழாவா.. சின்ன சேலத்தை அசர வைத்த ஜவுளி சங்க விழா!
- கவிநிலவு சுமதி சிவக்குமார்
சின்னசேலம்: நாம் பலவிதமான விழாக்கள் பார்த்து இருக்கிறோம். ஆனால் சின்னசேலத்தில் உள்ள ஜவுளி சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரே குடும்பத்து உறவுகளாக எண்ணி கிட்டத்தட்ட 20 வருடங்களாக பொங்கல் முடிந்த பிறகு, குடும்ப விழாவாக ஒன்று கூடி கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.
சின்னசேலம் நகர ஜவுளி வியாபாரிகள் நலச் சங்கம் சார்பில்தான் இந்த விழா வருடா வருடம் நடந்தேறி வருகிறது. கடந்த 30 வருடங்களாக ஒரே தலைவர் தான் இங்கு இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற நிர்வாகிகள் மாறினாலும் இவர் மட்டும் நிரந்தரம் என்பது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் நகர ஜவுளி வியாபாரிகள் நல சங்கத்தின் சார்பாக பொங்கல் சிறப்பு குடும்ப விழா சமீபத்தில் சிறப்பாக நடைபெற்றது. முதலில் மூங்கில்பாடி ரோட்டில் இருந்து ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலம் பேருந்து நிலையம், பூ மார்க்கெட், திரௌபதி அம்மன் கோயில், கடைவீதி வழியாக சென்று ஜவுளி சங்க தலைவர் வீட்டில் முடிந்தது. அங்கே அவர் குடும்பத்து உறவினர்கள் அனைவரும் வரவேற்றனர்.
அதன் பின்னர் நிகழ்ச்சி காலை 11 மணியளவில் துவங்கியது. இதில் சிறப்பு விருந்தினர்களாக சின்ன சேலம் அனைத்து வணிகர்கள் சங்க தலைவர் ரவீந்திரன், துணை தலைவரும் கட்டுமான சங்கத்தின் தலைவருமான முகம்மது ஹபீப், பொதுச் செயலாளர் செந்தில்குமார் , இணைத் தலைவரும் மளிகை சங்கத்தின் தலைவருமான பாண்டியன், ஹோட்டல் சங்கத்தின் தலைவர் குணசேகரன், அரிசி ஆலை சங்கத்தின் நிர்வாகியும் இணையும் கைகள் குழுவின் நிர்வாகியான எம் ஜி எஸ் என்ற குணசேகரன் இன்னும் பிற நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
முதலில் ஜவுளி சங்கத்தின் இணை செயலாளர் சீனிவாசன் பாபு வரவேற்புரை ஆற்றினார். அடுத்து ஜவுளி சங்க தலைவர் மற்றும் அவரது துணைவியார் இருவருக்கும் பொங்கல் சிறப்பு கௌரவ மரியாதையாக சந்தன மாலை பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.
அனைத்து வணிகர்கள் சங்கத்தின் தலைவர் முன்னிலை வகித்து உரையாற்றினார். சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினர்.
நகர ஜவுளி சங்கத்திற்கு மாதாந்திர கூட்டம் நடத்த போதிய வசதி இல்லாததால் அதற்கென ஒரு கட்டிடம் தேவை என்று கூட்டத்தில் ஜவுளி சங்க தலைவர் எடுத்து கூறினார். ஏற்பாடு செய்வதாக அனைத்து வணிகர் சங்க தலைவர் தலைவர் தெரிவித்தார்.
மேலும் கடைவீதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி வாடிக்கையாளர்களுக்கு தங்கள் வாகனங்கள் நிறுத்த வழிவகை செய்யும்படியும் காவல்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
சின்ன சேலம் மூங்கில்பாடி பைபாஸ் ரோடு மேம்பாலம் அமைக்கவும் சின்னசேலம் அம்சா குளத்தில் இருந்து ரயில்வே கேட்டு வரை நான்கு ரோடு அமைக்கவும் வணிகர்கள் கோரிக்கை வைத்தனர் .
இறுதியில் அனைத்து வணிகர்கள் சங்கத்தின் பொருளாளரும் நகர ஜவுளி சங்கத்தின் பொருளாளருமான சிவக்குமார் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார். இக்கூட்டத்தில் அனைத்து நிர்வாகிகளுக்கும் ஜவுளி சங்க உறுப்பினர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது. அதன் பின்னர் சுவையான மதியம் உணவு பரிமாறப்பட்டது.
(சுமதி சிவக்குமார்.. B. A., M. com., (co-op mgt)., M. A ., (yoga) ., DOM., (computer)., . கள்ளக்குறிச்சி மாவட்டம் மூஙகில்துறைப்பட்டு என்ற ஊரைச் சேர்ந்தவர். தனது ஊரில் ஏரிக்கு நீர் கொண்டு வர இணையும் கைகள் என்றொரு அமைப்பை ஏற்படுத்தினார் உயர்திரு அப்துல் ரஹீம் அவர்கள். நீர் நிரம்பி இருமுறை கோடி போனது. அதனால் கோமுகி நதியை வாழ்த்தி நடந்தால் வாழீ கோமுகி என்ற கவிதையை பதிவிட்டார் சுமதி சிவக்குமார். முகநூலில் நிறைய கவிதை தளங்களில் கவிதைப் போட்டி நடுவராகவும் கவியரங்கம் தலைவராகவும் திகழ்கிறார். கிட்டத்தட்ட 3000 சான்றிதழ்கள் 50 ஷீல்டுகள் பரிசு பெற்றுள்ளார். நாட்டுப்புற பாடல் எழுதி பாடவும் செய்வார். மதியின் மதி என்ற கவிதை புத்தகம் , தெம்மாங்கு பாடலா என்ற நாட்டுப்புற பாடல்கள் புத்தகம் வெளியிட்டுள்ளார். சின்னசேலம் கண்ணதாசன் கலை இலக்கிய பேரவையின் செயலாளராக செயல்படுகிறார்)