தந்தையின் பெருமை

Su.tha Arivalagan
Jul 10, 2026,10:17 AM IST
- சூடாமணி

தந்தை
 
வண்ண மலரெல்லாம்
வாடிவிடும் என்பதனால்
எண்ண மலரெடுத்து
எழுத்தாணிநூல்கொண்டு
உண்மை உரைப்பதற்கே 
ஓராரம் புனைந்துவந்தேன்; 
கன்னித் தமிழென்னும்
கனிமொழி அதிலேதான்.

தன்னிகரில் தந்தையின் பெருமைதனை
இவ்விடத்தே 
தலைவணங்கி நவின்றிடவே
நங்கையிவள் வந்துள்ளேன். 



தளரா உழைப்பதனைத் 
தந்திடும் தந்தையுமே 
தனிப்பெருஞ்சுடரொளியாம் 
தாரகைக்கு நிகரென்பேன்.

அன்னை இவள் சுமப்பதுவோ 
ஐயிருத்திங்கள்வரை:
தந்தையிவர் சுமப்பதுவோ
தரணியில் உயிருள்ளவரை.
ஆயிரம் உறவுகள் அகிலத்தில் கிடைத்தாலும் 
ஆசைமிகு அப்பாவின் 
உறவுக்கீடாமோ?

நேசகத்தில் நிகரில்லா 
நினைவுப் பண்நீரெமக்கு 
ஆசகற்றும் ஆசானாம் 
அறிவின் சுடர்ஒளிவிளக்கு
பேசுதற்குகந்தவரே;
பேராற்றல்மிக்கவரே !
எம் தந்தை திரு கிருஷ்ணசாமி அவர்களே. 

மாசகற்றும் மாண்பினராய் 
மாட்சியுடன் வாழ்ந்தவரே.

இராணுவத்தில் பணிபுரிந்த ஓரேழ்வருடங்கள் 
இரவுபகல் பாராது 
உழைத்திட்டீர்; உயர்ந்திட்டீர் .
இணையில் கூட்டுறவுத்
துறையதனில் இணைந்திட்டீர்.
இன் முகங் காட்டியே இனிதாய் உழைத்திட்டீர்.

இனிய நற்பண்பினளாம் ஜானகியின் கரம்பிடித்தீர்.
இன்னரும் செயல்களை இணைந்தே செய்திட்டீர்.
இலைஎனும் சொல்லதனை
இயம்பிட்ட நாளில்லை.
இன்பத்தில் திளைத்திட்டோம்; இணக்கமுடன்
வாழ்ந்திட்டோம்.

இல்லறம் சிறந்திட
இனிதாய் உழைத்திட்டீர்.
நல்லறம்நாட்டியேநன்கெமை வளர்த்திட்டீர்.
சொல்லுதற்கரிய நும் 
உழைப்பதனை அளித்திட்டீர்
வெல்லுதற்கறியரெனும் பெயரதனைப் பெற்றிட்டீர்.

கைப்பிடித்து நடந்ததோர்காலம் அது பொற்காலம்;
கைநிறையப் பொருளதனைப்
பெற்றதோர் நற்காலம்.
கைவிட்டுநீரும் காலனிடம்சென்றதனால் 
கையறு நிலையதனில் 
தவித்திட்டோம்; துயருற்றோம்.

அன்னையுடன் இணைந்திங்கு 
அயராது உழைத்திட்டோம் 
அல்லல் அகற்றிட்டோம்; 
அவனியில் உயர்ந்திட்டோம்.
மண்ணில் மறைந்திட்ட 
மாண்புமிகுத் தந்தையே 
விண்ணினின்று வாழ்த்திடுவீர் யாம்
உயர்ந்திடவே எந்நாளும்.

(கி.சூடாமணி, முதுகலை ஆசிரியர் ( ஓய்வு), கடலூர்)