மாணவர் போராட்டம் தொடர்பான சுற்றறிக்கை: வெடித்தது எதிர்ப்பு... வாபஸ் பெற்றது தமிழக அரசு!
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் அரசியல் போராட்டங்கள் மற்றும் கிளர்ச்சிகளில் பங்கேற்பதைத் தடுப்பது தொடர்பாக தமிழகக் கல்லூரி கல்வி இயக்ககம் வெளியிட்ட சுற்றறிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், கடும் எதிர்ப்பு காரணமாக அந்த உத்தரவு உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதியன்று கல்லூரி கல்வி ஆணையர் அலுவலகம் சார்பில் அனைத்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. அதில், இடதுசாரி கட்சிகள் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் ஜனதா கட்சி உள்ளிட்ட அமைப்புகள் நடத்தும் போராட்டங்கள், கிளர்ச்சிகளில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்பதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்காக பள்ளி கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகிய துறைகளிடையே தொடர்பை ஏற்படுத்தி, எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த விவரங்களை உடனுக்குடன் இயக்குநரகத்திற்கு அனுப்புமாறு உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்த உத்தரவு வெளியானதைத் தொடர்ந்து, மாணவர் அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்திய மாணவர் சங்கம் (SFI) இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
"மாணவர்கள் என்பதற்காக அவர்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளைப் பறிக்க முடியாது. மாணவர்களின் அரசியல் பங்களிப்பைக் கண்காணித்து ஒடுக்குவதா? அரசின் இந்த ஜனநாயக விரோத உத்தரவைக் கண்டித்து நாளை தமிழ்நாடு முழுவதும் தீவிர போராட்டம் நடத்தப்படும்" என்று இந்திய மாணவர் சங்கம் (SFI) அதிரடியாக அறிவித்தது. மேலும் பல்வேறு தரப்பினரும் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
மாணவர் சங்கங்களின் போராட்டம் மற்றும் பல்வேறு கோணங்களில் இருந்து எழுந்த கடுமையான அரசியல் அழுத்தம் காரணமாக, தமிழக அரசு மற்றும் கல்லூரி கல்வி இயக்ககம் பணிந்தது.இன்று (19.08.2026) கல்லூரி கல்வி ஆணையர் சிந்தியா செல்வி (Cynthia Selvi P) வெளியிட்ட புதிய அறிக்கையில், ஆகஸ்ட் 17 அன்று அனுப்பப்பட்ட சுற்றறிக்கை கடிதம் உடனடியாகத் திரும்பப் பெறப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
மாணவர்களின் ஜனநாயக உரிமைகளை முடக்கும் வகையிலான உத்தரவை அரசு உடனடியாகத் திரும்பப் பெற்றுள்ள சம்பவம் கல்வி மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.