மிஸ் மிஸ்.. எனக்கு அந்த bench பிடிக்கலை மிஸ்.. வகுப்பறை நினைவலைகள் 2025!
- சு. யாமினி பிரியா
முதல் பருவத் தேர்வுக்கு முழு மூச்சில் நானும் எனது குழந்தைகளும் தயாராகி கொண்டு இருந்தோம். கடைசி பாட வேளையின் போது ஒரு மாணவியின் அம்மா என்னிடம் வந்து அவளுக்கு அந்த பெஞ்சு புடிக்கலையாம் அதனால் வேற இடத்துல உட்கார வையுங்க மிஸ்.
ஏன் டா, என்ன ஆச்சு, சொன்னா தான தெரியும்.
சரிங்க நா என்னன்னு கேட்டு விசாரிச்சு இடத்தை மாத்தி உட்கார வைக்கிறேன் என்று கூறி அவள் அம்மாவை அனுப்பி வைத்தேன்.
அதன் பின் என்ன நடந்தது என்று விசாரித்த போது ஒரு நெடுங்கதை தொடர்ந்தது.
மாணவி A புதிய பேனாவை வைத்து இருந்திருக்கிறாள். மாணவி B ink தீர்ந்து போனதால் தன் நண்பி A விடம் வாங்கி எழுதி இருக்கிறாள். அதை பார்த்த மாணவி C அது மிகவும் பிடித்து போக ,பார்த்துவிட்டு தருகிறேன் என்று கூறி வாங்கி பார்த்திருக்கிறாள். வீட்டிற்கு சென்ற மாணவி A தனது பேனாவை C எடுத்து சென்று விட்டதாக புகார். வீட்டில் பார்த்த போது மாணவி C pouch ல் அந்த பேனா இருந்து இருக்கிறது. அன்று அவள் அப்பாவிடம் அடி வாங்கியதாக கூறினாள்.
நேற்றைய முன் தினம் விசாரித்த போது மாறி மாறி எனக்கு தெரியாது என்ற பதிலே வந்தது. இந்த பார்க்குற எல்லாத்து மேலயும் ஆசை படுறது தப்பில்லை, யாரு எடுத்தேனு சொல்லு , நானே உனக்கு பிடித்த பேனாவை வாங்கி தருகிறேன்
அவங்க அப்பா கஷ்டப்பட்டு வாங்கி கொடுத்து இருப்பார், இது போல் பல விதங்களிலும் புரிய வைக்க முயற்சித்தும்,பலன் இல்லாமல் அன்றைய நாள் இறுதி பாடவேளையும் முடிவுற்றது.
தெரிந்தும் தெரியாமலும் நிறைய தவறு செய்றோம், அத மறைக்க கூடாது, அதை தெரிந்து கொண்டு திரும்பவும் செய்ய கூடாது என்று கூறியும் எந்த பலனும் இல்லை. அடுத்த நாள் காலையிலும் தவறை ஒப்பு கொள்ள வில்லை.
சரி இரண்டு பேரும் என்னிடம் நடந்தவற்றை சொல்லா விட்டால் பாராவாயில்லை, என்ன நடந்ததோ அதை ஒரு பேப்பரில் எழுதி என்னிடம் கொடுங்கள், அதை நான் மட்டுமே படித்து கொள்வேன் என்று கூறி இருவரையும் எழுத சொன்னேன்.
மாணவி 2 இது தான் நடந்தது என்று தனக்கு தெரிந்தவற்றை எழுதி கொடுத்தாள். மாணவி 3 தனக்கு பிடித்து போனதால் தான் அந்த பேனாவை pouch ல் வைத்து எடுத்துச் சென்றதாக கூறி தனது தவறுக்கு வருந்தியும், மிஸ் நான் தான் எடுத்துட்டு போனேன்னு, யாருகிட்டயும் class ல சொல்லாதீங்க என்று அந்த paper ல் முடித்து இருந்தாள்.
தவறு செய்வதால் ஏற்படும் அவமானதிற்கே பயப்படுகிறோமே தவிர, தவறை ஒப்புக் கொள்ள பயப்படுவதில்லை.
இவ்வாறான அணுகுமுறை அந்த மாணவியிடம் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்ப்படுத்தும் என நம்புகிறேன்.
அவள் paper ல் உண்மையை கூறியதால் அவளுக்கு ஒர் புத்தகத்தை பரிசாக கொடுக்கலாம் என்று இருக்கிறேன்.
அனைவரும் ஏதோ ஒர் சூழ்நிலையில் தவறு செய்தவர்களே. சிறு வயதில் பள்ளியில் படிக்கும் போது பக்கத்தில் இருந்தவரின் pencil என் பையில் வந்த போது செமயா அடி வாங்கியது நினைவில் வந்தது.
அனைவருக்கும் கற்றல் ஒரே மாதிரி நிகழ்வதில்லை.
வாழ்க்கை முழுவதும் கற்றல் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
(சு. யாமினி பிரியா, பட்டதாரி ஆசிரியை, நகராட்சி நடுநிலைப்பள்ளி, ஆத்துப்பாளையம், கோவை)