கோடைகாலம் வந்தாச்சு.. ஜில்லுன்னு மண்பானை வச்சு தண்ணீர் குடிங்க.. நிறைய நன்மைகள் இருக்குங்க!
- ஸ்வர்ணலட்சுமி
கோடை காலம் வந்துவிட்டது. சிறுவர் முதல் பெரியவர் வரை கூறும் ஒரே வாக்கியம், அப்பா..என்ன வெயில்.. என்ன வெயில்.. ஒரே தண்ணீர் தாகம்... வெளியில் சென்று விட்டு வந்தாலே சில்லென தண்ணீர் குடிக்க தோன்றுகிறது இல்லையா?.. அதுவும் குளிர்சாதன பெட்டியில் ( ஃப்ரிட்ஜில் ) வைத்திருக்கும் சில்லென்ற தண்ணீர் பாட்டிலை திறந்து தாகத்திற்கு தண்ணீர் குடிப்பதில் என்ன சுகம். ஆனால் குளிர்சாதன பெட்டியில் வைத்துள்ள தண்ணீர் உடலுக்கு அவ்வளவு நல்லதல்ல. அதற்கு பதிலாக மண் பானை தண்ணீர் குடிப்பது சிறந்தது. இதனால் எத்தனை நன்மைகள் என்பதை அறிந்து கொள்வோம்..
கோடைகாலத்தில் வெயில் அதிகமாக இருக்கும் காரணத்தினால் பல நோய்கள் தொற்றிக் கொள்ளும். இதை தடுக்க மண்பானை நீர் சிறந்த ஒரு இயற்கை மருந்து ஆகும்.கனிமச்சத்துக்கள் நிறைந்த மண்பானை நீர் உடலுக்கு பல நோய் எதிர்ப்பு சக்திகளை அளிப்பது மட்டுமல்லாமல் தீராத தாகத்தையும் ஒரு டம்ளர் நீர் தீர்த்துவிடும்.
ஆனால் நாம் பெரும்பாலும், பெரும்பாலான இடங்களில் பாட்டிலில் அடைக்கப்பட்ட மினரல் வாட்டரை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். கேன் வாட்டர் என்பது தான் பல நகரங்களில் குடிக்க பயன் படுத்தப்படுகிறது. அந்த தண்ணீரை குளிர்ச்சியாக வேண்டுமெனில் பானையில் ஊற்றி வைத்து பயன்படுத்துவது சிறந்தது.
மண்பானை பயன்படுத்தும் முறை:
புதிய மண்பானை பயன்படுத்தும்பொழுது தேங்காய் நார் கொண்டு நன்றாக கழுவி குடிநீரை ஊற்றி வைத்து இரண்டு மணி நேரம் முதல் 6 மணி நேரம் வரை வைக்க வேண்டும். ஆனால் அந்த தண்ணீரை உபயோகிக்க கூடாது. மண்வாசனை அதிகமாக இருக்கும். அந்த தண்ணீரை கீழே ஊற்றி விட வேண்டும். இல்லையெனில், அதன் குளிர்ச்சியான தன்மை தணிந்தவுடன் செடிகளுக்கு ஊற்றலாம். (குறிப்பு: மிகவும் குளிர்ச்சியான தண்ணீரை செடிகளுக்கு ஊற்றக்கூடாது)
பின்னர் தேங்காய் நாரினால் சுத்தமான தண்ணீர் ஊற்றி பானையை நன்றாக கழுவ வேண்டும். ஒரு வாரம் தண்ணீர் மாற்றி, கழுவி மீண்டும் தண்ணீர் மாற்றி வைக்க மண்வாசனை குறைந்து விடும். பின்னர் தினசரி அதனை குடிக்க ஆரம்பிக்கலாம். மண்பானையில் உள்ள நீர் அருந்துவதால் மெட்டபாலிசத்தை தூண்டி அதன் வளர்ச்சியை அதிகரிக்கும். அதில் இருக்கும் மினரல்கள் உடலின் ஜீரண சக்தியையும் அதிகரிக்கும்.
குளிர்சாதன பெட்டியில் வைக்கப்பட்ட குளிர்ந்த நீர் அருந்துவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், அதனால் சில பின் விளைவுகள் ஏற்படும். மண்பானை நீர் எந்த பக்க விளைவுகளும் ஏற்படுத்தாது. குறிப்பாக சளி, இருமல்,தொண்டை வறட்சி, தொண்டைப்புண் போன்ற பிரச்சனைகளுக்கு மண் பானை நீர் ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.
கோடைகாலத்தில் மண்பானை நீர் அருந்துவதற்கு தேன் போன்று இனிமையான சுவையாக இருக்கும். இயற்கையாகவே மண் பானைகளில் உள்ள நீர் குளிர்ச்சி அடைகிறது. தண்ணீரின் சுவையும் அதிகரிக்கும். ஏனெனில், மண்பானையில் உள்ள மண் தண்ணீரை உறிஞ்சி வெளியே அனுப்புகிறது.
புதிய மண்பானை வாங்கும் பொழுது அதனை நன்றாக தட்டிப் பார்த்து கனமான பானையை வாங்க வேண்டும். அப்போது தான் அது எளிதில் விரிசல் விடாது.ஒரு தட்டில் மணல் பரப்பி அதன் மேல் பானையை வைத்து குடிநீரை ஊற்றி வைத்து குடிப்பது சிறந்தது. மணல் கிடைக்காத போது ஒரு பாத்திரம் அல்லது பெரிய அகலமான தாம்பாளம் வைத்து அதில் பானையை வைப்பது நல்லது. ஏனெனில் அதில் தண்ணீர் வெளிவரும். தினமும் பானையில் தண்ணீர் ஊற்றும் பொழுது வெளியில் வைத்துள்ள பாத்திரத்தில் உள்ள தண்ணீரையும் கீழே ஊட்ட வேண்டும் . இல்லையெனில், சிறிய புழுக்கள் மிதக்கும்.
மண்பானை தண்ணீர் உபயோகிப்பதனால் கிடைக்கும் நன்மைகள்
மண்பானை தண்ணீர் இயற்கையான குளிர்ச்சியை அளிப்பதுடன் உடலில் பிஹெச் (ph)அளவை சமன் செய்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இது நச்சுக்களை வெளியேற்றி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வெயில் காலத்தில் நமக்கு ஏற்படும் உடல் வெப்பத்தை தணித்து, தாகத்தை தணிப்பதோடு ஆஸ்துமா மற்றும் தொண்டைப்புண் போன்ற பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வாக அமைகிறது.
மண்பானையில் வெட்டிவேரை சிறிய மூட்டையாக கட்டி அதனை தண்ணீருக்குள் போட்டு விட வேண்டும். அதில் நல்ல நறுமணமும்,மருத்துவ குணமும் சேரும்.
மண்பானையில் உள்ள நீர் ஆல் கலைன் தண்ணீராக மாறும். இது உடலில் உள்ள புண்களை ஆற்றும். நம் உடலின் அமிலத்தன்மையையும் குறைக்கும்.அமிலமான உணவுகளை உட்கொள்ளும் பொழுது மண் பானை தண்ணீரை குடிப்பதனால் அமிலத்தன்மையின் வீரியத்தை குறைக்க உதவுகிறது.
மண்பானை தண்ணீர் குடித்தால் சிறுநீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குறையும். சிறுநீரகம் தொடர்பான நோய்கள் வராமல் தடுக்கும். தொடர்ந்து மண்பானை தண்ணீர் குடிப்பவருக்கு ரத்தம் சுத்தமாகும். கழிவுகள் வெளியேறும். உயர் ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம் போன்ற சமநிலை இல்லாதவர்க்கு ரத்த அழுத்தத்தை சீராக்கி ஆரோக்கிய நிலைக்கு மாற்றும் .
தண்ணீரில் உள்ள நச்சுக் கழிவுகளை நீக்கும்.மண்பானை ஒரு "இயற்கை ஃபில்டர்"
என்ன ஃப்ரெண்ட்ஸ் எங்க? கிளம்பிட்டீங்க.. மண்பானை வாங்கவா!.. சிறப்பு. மிக்க நன்றி
மேலும் இது போன்ற சுவாரஸ்யமான தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் தென் தமிழுடன்.எழுதியவர் உங்கள் ஸ்வர்ணலட்சுமி பாலசுப்ரமணி.