தொகுதி மறுவரையறை.. அனைத்துக் கட்சி எம்.பிக்கள் கூட்டத்திற்கு முதல்வர் விஜய் அழைப்பு!
சென்னை: தொகுதி மறுவரையறை தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழகத்தின் அனைத்து மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் முதல்வர் சி. ஜோசப் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.
தொகுதி மறுவரையறை விவகாரத்தை மத்திய பாஜக அரசு மீண்டும் கையில் எடுத்துள்ளது. இந்த சட்ட மசோதாவுக்கு தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு கட்சிகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. கடந்த முறை சட்ட மசோதாவை வேறு ரூபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் கொண்டு வர முயன்றபோது அதை எதிர்க்கட்சிகள் கூடி தடுத்து விட்டன.
இந்த நிலையில் மாறியுள்ள அரசியல் சூழலைக் கருத்தில் கொண்டு (மேற்கு வங்கத்தில் திரினமூல் காங்கிரஸ் எம்பிக்கள் பலரும் பாஜக ஆதரவாக மாறி விட்டனர்) மீண்டும் இந்த விவகாரத்தைக் கையில் எடுக்கிறது பாஜக.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் முதல்வர் விஜய் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளார். தொகுதி மறுவரையறை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கும் நோக்கில் வரும் 8-ஆம் தேதி கலந்தாய்வு கூட்டம் நடத்த முதல்வர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார். இதுதொடர்பான அழைப்பிதழ் டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்திலிருந்து எம்பிக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தக் கூட்டத்தில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தொகுதி மறுவரையறை விவகாரம் மாநிலத்தின் அரசியல் மற்றும் பிரதிநிதித்துவ அமைப்பில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது என்பதால், அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்டு ஒருங்கிணைந்த முடிவை எடுக்கும் வகையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் சுவாரஸ்யமாக விஜய் தலைமையிலான தவெகவுக்கு நாடாளுமன்றத்தில் ஒரு எம்.பி கூட கிடையாது. அதேசமயம், திமுகவுக்குத்தான் அதிக அளவிலான உறுப்பினர்கள் உள்ளனர். இப்படிப்பட்ட சூழலில் முதல்வர் விஜய், எம்.பிக்கள் கூட்டத்தைக் கூட்டியிருப்பது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தமிழ்நாட்டுக்கு உள்ள எம்.பிக்களின் மொத்த எண்ணிக்கை 57 ஆகும். இதில் 30 பேர் திமுகவைச் சேர்ந்தவர்கள். 4 பேர் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஆவர். பாமக, மக்கள் நீதி மய்யம், தேமுதிகவுக்கு தலா ஒரு எம்பிக்கள் உள்ளனர். மீதமுள்ள 20 பேர் தவெகவுக்கு ஆதரவாக உள்ளவர்கள் ஆவர்.
கட்சி வாரியாக லோக்சபா எம்.பிக்கள் எண்ணிக்கை (மொத்தம் 39)
திமுக - 22
காங்கிரஸ் - 9
விடுதலைச் சிறுத்தைகள் - 2
இந்திய கம்யூனிஸ்ட் - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 2
மதிமுக - 1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1
இதில் திமுகவைத் தவிர மற்ற கட்சிகள் அனைத்துமே தற்போது தவெகவுடன் இணைந்து கூட்டணியாக உள்ளன என்து குறிப்பிடத்தக்கது. லோக்சபாவில் அதிமுகவுக்கு பிரதிநிதித்துவம் கிடையாது.
கட்சி வாரியாக ராஜ்யசபா எம்.பிக்கள் எண்ணிக்கை (18)
திமுக - 8
அதிமுக - 4
காங்கிரஸ் - 3
பாமக - 1
மக்கள் நீதி மய்யம் - 1
தேமுதிக - 1