சாமானிய மக்களுக்கு ஹேப்பி நியூஸ்.. அம்மா உணவகங்களைப் புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
May 18, 2026,05:57 PM IST
சென்னை: தமிழ்நாடு முழுவதும் உள்ள அம்மா உணவகங்களைப் புதுப்பித்துச் சீரமைக்க முதல்வர் சி. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் 383 அம்மா உணவகங்களும், மற்ற மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகள் மூலமாக 237 அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
அம்மா உணவகம் என்பது தமிழ்நாட்டில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில், குறைந்த விலையில் தரமான உணவு வழங்குவதற்காகத் தொடங்கப்பட்ட ஒரு மிகச்சிறந்த சமூக நலத் திட்டமாகும்.
2013-ஆம் ஆண்டு அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவால் சென்னை மாநகராட்சியில் முதன்முதலில் தொடங்கி வைக்கப்பட்டது. தினக்கூலிகள், அடித்தட்டு மக்கள், ஆதரவற்றோர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்து தங்கிப் படிக்கும் மாணவர்கள் பசியின்றி வாழ வேண்டும் என்பதே இதன் முதன்மை நோக்கமாகும்.
இந்தத் திட்டமானது எடுத்த எடுப்பிலேயே மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அம்மா உணவகங்களின் மாபெரும் வெற்றிக்குக் காரணமே அதன் மிகக் குறைந்த விலைதான்.
காலை 7 மணி முதல் 10 மணி வரை அம்மா உணவகங்கள் இயங்கும். அதேபோல பிற்பகல் 12 மணி முதல் 3 மணி வரை அவை செயல்படும். மாலையில் 4. 30 மணி முதல் 6.30 வரை இவை இயங்கும். இங்கு ஒரு இட்லி ரூ 1 மட்டுமே. அதேபோல பொங்கல், ரவா கிச்சடி ஆகியவை வெறும் ரூபாய்தான். மதியம் வழங்கப்படும் சாம்பார் சாதம், எலுமிச்சை, கறிவேப்பிலை சாதம் தலா ரூ. 5 மட்டுமே. தயிர் சாதம் ரூ. 3 தான். மாலையில் சப்பாத்தி பருப்புக் கூட்டுடன் தரப்படும். இதன் விலை 2 சப்பாத்தி ரூ. 3 மட்டுமே.
இந்த உணவகங்களை முழுமையாக மகளிர் சுயஉதவிக் குழுக்கள் மட்டுமே நிர்வாகம் செய்து, சமைத்து பரிமாறுகின்றனர். இதன் மூலம் பல்லாயிரக்கணக்கான பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது.
சுகாதாரம்:** விலை குறைவாக இருந்தாலும், உணவின் தரம், சுவை மற்றும் தூய்மை ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தப்படுகிறது. தூய்மையான குடிநீர் வசதியும் இங்கு உண்டு.
சென்னை மட்டுமன்றி, தமிழகத்தின் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் இந்த உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு இது பெரும் உதவியாக இருக்கிறது.
வறுமை ஒழிப்பிலும், பசிப் பிணியைப் போக்குவதிலும் இந்தத் திட்டம் ஒரு முன்னோடித் திட்டமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவின் பிற மாநிலங்களும் (எ.கா: கர்நாடகாவின் 'இந்திரா உணவகம்'), சில வெளிநாடுகளும் கூட இந்தத் திட்டத்தை முன்மாதிரியாகக் கொண்டு தங்கள் பகுதிகளில் மலிவு விலை உணவகங்களைத் தொடங்கின. அம்மா உணவகம் என்பது வெறும் உணவகம் மட்டுமல்ல; அது லட்சக்கணக்கான ஏழை மக்களின் பசியாற்றும் ஒரு உன்னதமான வாழ்வாதாரத் திட்டமாக பார்க்கப்படுகிறது.
இருப்பினும் கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் அம்மா உணவகங்களில் உணவின் தரம் சரியில்லை என்றும் அவற்றை சரியாக பராமரிப்பதில்லை என்றும் அதிமுக குற்றம் சாட்டி வந்தது. பொதுமக்கள் மத்தியிலும் இது எதிரொலித்தது. இந்த நிலையில் புதிய தவெக ஆட்சியில் அம்மா உணவகங்களுக்குப் புத்துயிர் அளிக்க உத்தரவிடப்பட்டிருப்பது அதிமுகவினர் மத்தியில் மட்டுமல்லாமல், சாமானிய மக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக முதல்வர் சி. ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:
சமீப காலங்களில் அம்மா உணவகங்களில் அளிக்கப்படும் உணவு வகைகளின் தரம் மற்றும் சுவை திருப்திகரமாக இல்லை என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக்கொண்டு வரப்பட்ட நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உரிய அரசுத்துறைச் செயலாளர்களுடன் கலந்தாலோசித்து, அம்மா உணவகங்களுக்குத் தேவைப்படும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துமாறும், சமையல் உபகரணங்களை உடனடியாகக் கொள்முதல் செய்யுமாறும், சுவையுடன் கூடிய தரமான உணவு வகைகளைத் தங்குதடையின்றிப் பொதுமக்களுக்கு வழங்கவும் ஆணையிட்டுள்ளார்.
இந்த மறுசீரமைப்பிற்கும், பொருட்கள் கொள்முதல் செய்வதற்கும் மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளின் பொது நிதியிலிருந்து செலவினங்களை மேற்கொள்ள தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.