ரதன் பண்டிட் நியமனம் .. கொஞ்சம் கூட ஈகோ பார்க்காமல் ரத்து செய்த முதல்வர் விஜய்!

Su.tha Arivalagan
May 13, 2026,02:00 PM IST

சென்னை: தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள தவெக அரசு, ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட்டின் அரசு ரீதியான நியமனத்தை தற்போது அதிகாரப்பூர்வமாகத் திரும்பப் பெற்றுள்ளது. 


முதலமைச்சர் விஜய்யின் இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் கொஞ்சம் கூட கெளரவம் பார்க்காமல் இந்த நியமனத்தை முதல்வர் விஜய் ரத்து செய்திருப்பது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.


பின்னணி என்ன?


தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளராகவும், ஆஸ்தான ஜோதிடராகவும் இருந்து வந்தவர் ஜோதிடர் ரிக்கி ரதன் பண்டிட். இவர் முன்பு மறைந்த ஜெயலலிதாவுக்கும் ஆலோசகராக இருந்தவர்.


நேற்று இவர் முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. ஒரு ஜோதிடரை, அரசுப் பொறுப்புக்கு மாற்றப்பட்டது சமூக வலைதளங்களிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் பல்வேறு விவாதங்களை எழுப்பியது. 




தவெக அரசுக்கு ஆதரவு தரும் கட்சிகளும் கூட இதை விமர்சித்திருந்தன. இந்த நிலையில், இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரிலும் பிரேமலதா விஜயகாந்த், தமீம் அன்சாரி உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி தலைவர்களும் எதிர்ப்பும், விமர்சனமும் தெரிவித்தனர்.


இதுகுறித்து விஜய் தனது பதிலுரையின்போது இதுகுறித்துப் பரிசீலிப்பதாக கொஞ்சம் கூட தயங்காமல் பதிலளித்திருந்தார். இதன் மூலம் ரத்தனின் நியமனம் ரத்து செய்யப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது அதைச் செய்து விட்டார் முதல்வர் விஜய்.


ஒரு ஜோதிடராக அறியப்படுபவர் அரசு அதிகாரியாக நியமிக்கப்பட்டது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு அரசு செவிசாய்த்துள்ளதாகத் தெரிகிறது. கட்சிப் பணிகளில் ரதன் பண்டிட் தொடர்ந்து நீடிப்பார் என்றும், அரசு நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


அரசியல் வட்டார ரியாக்ஷன்


இந்தத் திடீர் அறிவிப்பு குறித்து அரசியல் விமர்சகர்கள் கூறுகையில், "ஆரம்பக் கட்டத்திலேயே இத்தகைய சலசலப்புகளைத் தவிர்ப்பது ஒரு புதிய அரசுக்கு நல்லது. நிர்வாக ரீதியான நியமனங்களில் மிகுந்த கவனத்துடன் செயல்படுவதையே இந்த ரத்து நடவடிக்கை காட்டுகிறது" என்று கருத்துத் தெரிவிக்கின்றனர். 


தற்போதைய நிலையில், ரதன் பண்டிட் வகிக்கவிருந்த 'சிறப்பு அதிகாரி' பதவிக்கு மற்றொரு அனுபவம் வாய்ந்த ஐஏஎஸ் அதிகாரி அல்லது துறை சார்ந்த நிபுணர் நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


வழக்கம் போல பிடிவாதம் பிடிக்காமல் தவறு என்று சொல்லப்படும்போது அதைத் திருத்திக் கொள்ள நான் தயங்க மாட்டேன் என்ற செய்தியையும் விஜய் இந்த நியமன ரத்து மூலம் மக்களுக்குத் தெரிவித்துள்ளார் என்றும் கருதப்படுகிறது.