புதிய படங்களை 7 நாட்களுக்கு 5 காட்சிகள் திரையிடலாம்.. தியேட்டர்களுக்கு விஜய் ஹேப்பி நியூஸ்!

Su.tha Arivalagan
May 25, 2026,06:49 PM IST

சென்னை: தமிழகத்தில் புதிய திரைப்படங்கள் வெளியாகும் நாளில் இருந்து முதல் ஒரு வாரத்திற்கு (7 நாட்களுக்கு) தினமும் 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்து முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


திரைத் துறையினருக்கு குறிப்பாக தியேட்டர்களுக்கு இந்த செய்தி பெரும் மகிழ்ச்சியான செய்தியாக வந்து சேர்ந்துள்ளது.


இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:


கடந்த 16.5.2026 அன்று திரைப்படத் துறையினர் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை நேரில் சந்தித்துப் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் முக்கியமாக, தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் அனைத்துத் திரைப்படங்களையும் நாளொன்றுக்கு ஐந்து காட்சிகள் திரையிட அனுமதிக்குமாறு கோரியிருந்தனர்.




1957ஆம் ஆண்டு தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதியின் கீழ் வழங்கப்பட்டு வரும் 'C' படிவ உரிம நிபந்தனை 14-A-இன் படி, தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும் தினசரி நான்கு காட்சிகள் மட்டுமே திரையிடப்பட்டு வருகின்றன. உள்ளூர் பண்டிகை நாட்கள் அல்லது பொது விடுமுறை நாட்களில் மட்டும், மாவட்ட ஆட்சியர் அல்லது சென்னை மாநகர காவல் ஆணையரின் சிறப்பு அனுமதியோடு கூடுதலாக ஒரு காட்சி (ஐந்து காட்சிகள்) திரையிடப்பட்டு வருகிறது.


திரையுலகினரின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர், தமிழ்நாடு திரையரங்குகள் (ஒழுங்குமுறை) விதிகளில் முக்கிய திருத்தங்களை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.


தமிழகத்தில் உள்ள அனைத்துத் திரையரங்குகளிலும், புதிய தமிழ்த் திரைப்படங்கள் வெளியாகும் நாளிலிருந்து தொடர்ந்து ஏழு நாட்களுக்கு தினசரி ஐந்து காட்சிகள் திரையிடலாம்.


உள்ளூர் பண்டிகை நாட்கள், பொது விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினசரி ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.


இந்த புதிய உத்தரவின்படி 5 காட்சிகள் திரையிடுவதற்கு, அரசிடமிருந்தோ அல்லது உரிமம் வழங்கும் அதிகாரிகளிடமிருந்தோ இனி தனியாக எந்தவொரு சிறப்பு அனுமதியும் பெறத் தேவையில்லை என முதல்வர் ச. ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார்.


தமிழக அரசின் இந்த அதிரடி உத்தரவு, தயாரிப்பாளர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் ஒட்டுமொத்தத் திரைத்துறையினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.